காளையார்கோவில் : கொல்லங்குடி அரியாகுறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி சுவாதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காளையார்கோவில் வீரமணி சாஸ்திரிகள் தலைமையில் அம்மனுக்கு யாகபூஜை,சிறப்பு அபிஷேகத்துடன்,காலை 9.10 மணிக்கு தங்ககொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. மரத்திற்கு புனித நீர் ஊற்றி, சிறப்பு அபிஷேகம் நடந்தது.இரவு பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டனர். அம்மன் கேடக விமானத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று கோவில் பூசாரிகள் சார்பில் 108 சங்காபிஷேகம்,அன்னதானம் நடக்கிறது. செயல் அலுவலர் ஜகந்நாதன், கண்காணிப்பாளர் நாராயணன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர்கள் மெய்யப்பன், கதிரேசன், ஊராட்சி தலைவர் துரைச்சிங்கம், முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன்,ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.