சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கூவனூத்து குரும்பபட்டியில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கழுமர ஏற்றம் நடந்தது. கடந்த ஆக., 20 அன்று சாமி சாட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் ஆக., 27ல் இரவு அம்மன் அலங்கரிக்கப் பட்டு மேளதாளம், வாணவேடிக்கை முழங்க கோயிலை அடைந்தார். நேற்று 28ல் காலை முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பகல் 1:00 மணிக்கு கழுமரத்தில் எண்ணெய், சோற்றுக் கற்றாலை, கேப்பை பொட்டு உள்ளிட்டவை தடவப்பட்டு ஊன்றப்பட்டது.
இதையடுத்து படுகள பூஜைகள் நடந்தது. மாலையில் கழுமர ஏற்றம் நடந்தது. சுமார் 70 அடி உயர கழுமரத்தில் இப்பகுதி இளைஞர்கள் போட்டி போட்டு ஏறினர். இரவு புராண நாடகம் நடந்தது. இரவு 29ம் தேதி பகலில் மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைவதுடன் விழா நிறைவடைகிறது.