பதிவு செய்த நாள்
02
ஏப்
2012
10:04
திருப்பதி :திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், ராமநவமியான, உண்டியல் காணிக்கை மூலம், 5.73 கோடி ரூபாய் கிடைத்தது.இது இந்த ஆண்டின் ஜனவரி முதல் நாளில், உண்டியல் காணிக்கை மூலம் வசூலான, 1.50 கோடி ரூபாயை விட அதிகமாகும். பணமாக பெற்ற காணிக்கைதான், 5.73 கோடி ரூபாய். இதுதவிர தங்கம், வெள்ளி மற்றும் இதர மதிப்புமிக்க பொருட்களாக பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் இன்னும் மதிப்பிடப்படவில்லை. திருமலைக் கோவில் உண்டியலில், இவ்வாண்டு ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரு மாதங்களில், பக்தர்கள் தங்கள் காணிக்கையாக செலுத்தியுள்ள தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களின் எடை, 126 கிலோ என, கணக்கிடப்பட்டுள்ளது.திருமலை கோவிலுக்குள் காணிக்கைகளை எண்ணிப் பார்த்து கணக்கிடும் பரசாமணி (காணிக்கைகளை எண்ணும் இடத்தின் பெயர்) பிரிவில், நேற்று சோதனையிட்ட நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் இத்தகவலை தெரிவித்தார்.
டிக்கெட்டுகளில் தில்லுமுல்ல: ஒரு முறை பதிவு செய்தாலே போதும், அடுத்த 50 ஆண்டுகளுக்கு அவரே தொடர்ந்து தரிசனம் செய்யலாம். இது போன்ற தில்லுமுல்லு தரிசன பதிவுகளை கண்டறிந்த திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், 3,344 முன்பதிவு ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை அதிரடியாக ரத்து செய்துள்ளனர். கடந்த காலங்களில் சிலர் அதிக எண்ணிக்கையில் சேவா டிக்கெட்டுகளை, ஒருவரது பெயரிலேயே முன்பதிவு செய்து அந்த டிக்கெட்டுகளை முறைகேடாக விற்று வருவது, அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்தது. இது போன்று சேவா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள், அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கு, அடுத்த பக்தர்களுக்கு இந்த டிக்கெட்டுகள் கிடைக்காதபடி முன்பதிவு செய்துள்ளதும் தெரியவந்தது. ஆர்ஜித சேவா டிக்கெட் முன்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாகக் கண்டறிந்த அதிகாரிகள், "கேர் ஆப் திருப்பதி தேவஸ்தானம் பெயரில் பதிவு செய்திருந்த டிக்கெட்டுகள் அனைத்தையும் ரத்து செய்தனர். அதிக எண்ணிக்கையில் முன்பதிவு செய்திருந்த பக்தர்களுக்கு, ஒரு ஆண்டில் வஸ்திர அலங்கார சேவைக்கான ஒரு டிக்கெட்டும், அபிஷேகம், தோமாலை, அர்ச்சனை, கஸ்தூரி கிண்ணம் டிக்கெட்டுகள் ஐந்தும், அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, சகஸ்ர கலசாபிஷேகம், திருப்பாவாடை போன்ற சேவா டிக்கெட்டுகள் இரண்டு வீதமும் பெற்றுக் கொள்ள, அவகாசம் அளிக்கப்படும். இதை விட அதிக டிக்கெட் பெற்றிருந்தால், அவற்றை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதால், தற்போது 3,344 டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரத்து செய்யப்பட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தினசரி, "கரன்ட் புக்கிங் திட்டத்தில் சேர்த்து, எலக்ட்ரானிக் நடைமுறையில் பக்தர்களின் பெயர் பதிவு செய்து, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, டிக்கெட்டுகளை வினியோகம் செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.