பதிவு செய்த நாள்
02
ஏப்
2012
10:04
நாகப்பட்டினம் : நாகை மாவட்ட தேவாலயங்களில், குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியை முன்னிட்டு, குருத்தோலை பவனி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன், ஜெருசலேம் நகரை நோக்கி சென்றபோது, மக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி வரவேற்றதை நினைவு கூறும் வகையில், நாகை மாவட்டத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில், நேற்று காலை குருத்தோலை பவனி நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு, வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா கோவிலில், காலை 6 மணிக்கு சிறப்புக் கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. காலை 7 மணிக்கு, குருத்தோலை புனிதம் செய்யப்பட்டு, குருத்தோலை பவனி நடந்தது. பங்கு பாதிரியார் ஆரோக்கியதாஸ் தலைமையில், ஆயிரக்கணக்கான மக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி, தேவாலயத்தை சுற்றி பவனி வந்தனர். தொடர்ந்து, பேராலய கீழ் கோவிலில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலும் திருப்பலியும், செபமாலையும் நடந்தது. மாவட்டத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பங்கு பாதிரியார்கள் தலைமையில், நடந்த குருத்தோலை பவனியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
குருத்தோலை விழா: கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை முன்னிடடு குருத்தோலை ஞாயிறு விழா ஆலயங்களில் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் ஜெபமாலை அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை ஏந்தி ஆலயத்தை வலம்வந்தனர். பின் சிறப்பு திருப்பலி நடந்தது. வரும் வியாழன் பெரிய வியாழனை முன்னிட்டு ஆலயங்களில் பாதம் கழுவுதல் சடங்கும், வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும் கருதப்படுகிறது. இதையொட்டி சிறப்பு திருப்பலியும் ஞாயிறன்று ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.