பங்குனி உத்திரத் திருவிழா கொடுமுடியில் குவியும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2012 11:04
கொடுமுடி: ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான காவடி பக்தர்கள் குவிகின்றனர். முருக பக்தர்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் பங்குனி உத்திரத் திருவிழா, கொடுமுடியில் ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக நடக்கும். பல நாட்கள் விரதம் மேற்கொண்டு தாரை, தப்பட்டையுடன் நடை பயணம் செய்து பழனி மலைக்கு தீர்த்தக்காவடி எடுத்துச் செல்கின்றனர். தமிழகம் மட்டுமன்றி கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை மற்றும் துளசி மாலை அணிந்து, கரகாட்டத்துடன் கொடுமுடிக்கு வந்து காவிரி ஆற்றில் நீராடி, புனித நீரை கலசத்தில் நிரப்பி, வன்னிமர இலையை வைத்து பழனி மலைக்கு எடுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்தாண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி உத்திரத் திருவிழா நடப்பதால், தற்போது கொடுமுடிக்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. சில நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர். திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகளில் தங்கி ஓய்வெடுத்த பின், காவடி மற்றும் கலசத்தை காவிரி ஆற்றுக்கு எடுத்துச் சென்று தீர்த்தம் எடுத்தபின், மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து, பழனி மலைக்கு பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் செல்கின்றனர்.