பதிவு செய்த நாள்
06
செப்
2019
12:09
அன்னுார்: அன்னுார், சூலுார் மற்றும் கருமத்தம்பட்டியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. இந்து முன்னணி சார்பில், அன்னுார், இந்திரா நகர், கணேசபுரம், கடத்துார், கரியாக்கவுண்டனுார், அக்கரை செங்கப்பள்ளி உள்பட, 50 இடங்களில், செப்., 2ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, அன்னுார் – ஓதிமலை ரோட்டில், விசர்ஜன விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஏகல் வித்யாலயா அமைப்பின், தென்பாரத அமைப்பாளர் விஸ்வநாதன் காவிக்கொடி அசைத்து, விசர்ஜன ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
விசர்ஜன ஊர்வலம், இரவு 7:00 மணிக்கு துவங்கி, தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு வழியாக சென்று, ஓதிமலை ரோட்டை 9:30 மணிக்கு அடைந்தது. 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அங்கிருந்து, லாரிகளில் ஏற்றப்பட்டு, சிறுமுகை அருகே பவானி ஆற்றில், விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சூலுார், கருமத்தம்பட்டியில் இ.மு., சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, மூன்று நாட்கள் வழிபாடுகள் நடந்தன. நேற்று முன் தினம் மாலை, கருமத்தம்பட்டியில் மாவட்ட தலைவர் சுப்ரமணியம் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. பின், சாமளாபுரத்தில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. சூலுார் பெருமாள் கோவில் திடலில் நடந்த விசர்ஜன விழா பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., கந்தசாமி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். விநாயகர் சிலைகள், மார்க்கெட் ரோடு, திருச்சி ரோடு, கலங்கல் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று, நொய்யல் ஆற்றங்கரையில் முடிந்தது. அங்கு, சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.