வைகுண்டம் செல்ல ஆயத்தமான இந்திரன், சிறிது துாரம் சென்று விட்ட ஹேமன், சுக்லனை நோக்கி, “முனிசீடர்களே..” என அழைத்தான். எதற்கு அழைத்தாய் என்பது போல அவர்கள் பார்த்தனர். “சீடர்களே! நாம் மூவரும் சாப விமோசனம் பெற்றவர்கள். காரணம் இல்லாமல் நம் சந்திப்பு நிகழவில்லை. சாபம் பெற காரணமான தவறு குறித்து நம்மால் சிந்திக்க முடிந்தது. இதனால் எனக்குள் சில கேள்விகள் எழும்பின. உங்களுக்கு ஏதும் தோன்றவில்லையா?” என கேட்டான் இந்திரன். “இதில் என்ன இருக்கிறது?” சாபத்தால் பல்லிகளாக இருந்தீர்களே...உங்களுக்கு வருத்தம் இல்லையா?” “மனித வடிவம் எடுத்த பின்பே மனம் காரணமாக பழைய நினைவுகள் தோன்றின. பல்லியாக இருந்தவரை அதற்குண்டான நிலையில் அப்படியே வாழ்ந்தோம்” “அந்த வாழ்வு எப்படி இருந்தது?” “எதற்காக கேட்கிறீர்கள்?” “நான் யானையாக இருந்ததும், நீங்கள் பல்லியாக இருந்ததும் சாபத்தால் தான். தண்டனைக்குரிய பிறப்பும், வாழ்வும் எப்படிப்பட்டது என்பதை நான் உணர்ந்து விட்டேன். அதிலும் யானையாக திரிந்த போது கிடைத்ததை உண்டேன். ஒவ்வொரு நாளும் துன்பமாகவே கழிந்தன. மனிதப்பிறப்பு எத்தனை மேலானது என்பதை யானையாக இருந்த போது உணர்ந்தேன். படைப்பின் அதிசயத்தை எண்ணி பிரமித்தேன்.”
“ பல்லி பிறப்பில் கடமைகள் ஏதுமில்லை. பசிக்கு இரை தேடியும், பாதுகாப்பாக மரத்தில் பதுங்கியும் வாழ்ந்தோம். மழை பெய்தால் வெளியே வர மாட்டோம். உணவும் கிடைக்காது” “இப்படிப்பட்ட நிலையில் இருந்து மேலான பிறப்பாக இப்போது இருக்கிறோம். உயிர்களை புரிந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு இது. அதே நேரம் வினைப்பயனால் தான் இந்த நிலை ஏற்பட்டது. எனவே நல்வினைகளை மட்டுமே நாம் செய்ய வேண்டும். ஒருவேளை தவறு செய்தாலும் இந்த தலமும், அதில் கோயில் கொண்டிருக்கும் தேவராஜனும் நமக்கு விமோசனம் கொடுப்பார். அப்படி அளிக்கவே பரம்பொருளான மகாவிஷ்ணு நம்மை வைத்து இந்த திருத்தலத்தை உருவாக்கியுள்ளார்” “மகாவிஷ்ணுவின் அருளால் நமக்கு விமோசனம் கிடைத்தது. இனி நம்மைப் போல உலகிலுள்ள அனைவருக்கும் கிடைக்கப் போகிறது” என்றனர் ேஹமனும், சுக்லனும்.
“ அது மட்டும் போதாது. குருநாதருக்கு எப்படி சேவை செய்ய வேண்டும் என்பது பற்றியும் இங்கு வருவோர் அறிய வேண்டும். எனவே உங்களின் பல்லி வடிவை நான் இங்கு சிலை வடிவாக்கி பிரதிஷ்டை செய்யப் போகிறேன். உங்களை தொட்டு வணங்குவோர் குருசாபமோ, குருசேவையில் குறையோ இருந்தால் நீங்கப் பெறுவர் என தேவர்களின் தலைவன் என்ற முறையில் வரம் தர விரும்புகிறேன்” என்றான் இந்திரன்.
ஹேமனும், சுக்லனும் அதைக் கேட்டு மகிழ்ந்தனர். “குருநாதரின் சாபம் கூட முடிவில் மேலான நன்மை தரும் என்பதற்கு உதாரணமாகி விட்டோம்” என்றனர். அதன் பின் இந்திரன் மூலம் பல்லி உருவங்கள் இரண்டு தங்கம், வெள்ளி கவசத்துடன் இக்கோயிலில் உருவாகின. “என்னை சிந்தித்தபடி உங்களின் உருவத்தை தொடுவோரின் தோஷம் போகும்” என்றான் இந்திரன். பின்னர் வைகுண்டம் புறப்பட்டான். வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமி தாயாரையும் பணிந்தான். “இந்திரா! நீ விமோசனம் பெற்று திரும்பியது கண்டு மகிழ்கிறோம். இனி கடமையில் கருத்தாக இருப்பாய் அல்லவா?” என்றாள் மகாலட்சுமி. “ஆம் தாயே! பாடம் கற்றுக் கொண்டேன். உங்களோடு சேர்ந்து என்னையும் மக்கள்வழிபடும் நிலையையும் அடைந்தேன். சாபம் பெற்ற போது வருத்தமாக இருந்தது. ஆனால் அதன் பயனாக ஒரு திருத்தலம் கிடைத்துள்ளதே. அதற்கு நன்றி சொல்லவே இங்கு வந்தேன்” “மகிழ்ச்சி... அந்த திருத்தலத்தில் இன்னும் பல அதிசயங்களும் நடக்க இருக்கிறது.” என்றாள் மகாலட்சுமி.
அத்தனை சம்பவமும் மகாலட்சுமியின் நினைவில் தோன்றி முடிந்த நிலையில், “தேவராஜ சுவாமியாக விளங்கும் தங்களின் அடுத்த திருவிளையாடல் யாதோ?” எனக் கேட்டாள். “இந்த முறையும் கலைவாணியே அத்திகிரியின் அடுத்த வரலாற்றினை தொடங்கப் போகிறாள். தேவராஜனான நான் வரதராஜனாக ஆகப் போகிறேன்” என்றார் மகாவிஷ்ணு. “அது ஏன் இப்போதும் வாணியைத் தேர்வு செய்தீர்கள் என அறியலாமா?” எனக் கேட்டாள் மகாலட்சுமி. “வாணியே கல்வி, கேள்வியின் சூட்சும சக்தி. மன இருள் போக்கி ஞானதீபம் ஏற்றுபவள். அப்படி இருளை நீக்க வேண்டியவள் தவறு செய்தால் என்னாகும் என்பதை தேவர்கள் மட்டுமின்றி மனிதர்களும் உணர வேண்டும் அல்லவா?” இப்படி சக்தி படைத்த வாணி எப்படி தவறு செய்வாள்?” “முன்பு ஒருமுறை எப்படி செய்தாளோ.. அப்படியே தான்!”
மகாவிஷ்ணுவின் விருப்பப்படி சத்திய லோகத்தில் இருந்து தொடங்கியது அடுத்த கட்டம். சத்தியலோகத்தில் பிரம்மாவின் முன் கோபத்துடன் வந்தாள் சரஸ்வதி. “தாமரை மலர் போன்ற உன் முகத்திலா கோபம்?” கேட்டான் பிரம்மன். “நான் என்ன செய்வேன்? நான் கோபப்படும்படி நடக்கிறார்களே...?” “ யாரைச் சொல்கிறாய்?” “படைப்புக்கடவுளான தாங்கள் அறியாததா?” “என்ன தான் அறிந்தாலும், பராசக்தியின் அம்சமான மூன்று தேவியரின் மனதை அறிவது சுலபமல்ல! அதிலும் ஞானச் செல்வம் மிக்க உன்னை அறிவது கடினம்.....” “அது என்ன ஞானச்செல்வம்! எனக்கு இந்த செல்வம் என்ற வார்த்தையே எரிச்சலைத் தருகிறது” “ஓரிடத்தில் நில்லாமல் செல்லும் எல்லாமே செல்வம் தானே?”
“கல்வி என்பது இந்த மற்ற செல்வங்களுக்கு இணையானது அல்ல... ஏனைய செல்வங்கள் அழியும் அல்லது திருடப்படும் சாத்தியம் உண்டு. ஆனால் கல்வி அப்படியல்ல! எடுக்க எடுக்க குறையாத ஊற்று. கொடுக்க கொடுக்க பெருகுவது. அப்படிப்பட்ட கல்வியை ஓரிடத்தில் நிற்காத செல்வத்துடன் எப்படி ஒப்பிடலாம்?” “ஒரு புரிதலுக்காக சொன்னேன். இதைப் போய் பெரிதுபடுத்துகிறாயே?” “பெரிதுபடுத்தவில்லை... நான் எப்போதும் பெரிதாகவே உள்ளேன். ஆனால் என்னை சிறுமைப்படுத்தும் சம்பவம் நிகழும் போது சும்மா இருக்க முடியுமா?” “உன்னை யார் சிறுமைப்படுத்தியது?” “எல்லாம் உங்கள் படைப்பால் உருவானவர்கள் தான். ஒருபுறம் லட்சுமி, இன்னொரு புறம் நாரதன், அது போக இந்திரன்...” “மீண்டும் யார் பெரியவர் என்ற கேள்வியா?” “உங்களை இப்போது நான் கேட்கிறேன். மூவரில் நான் பெரியவளா இல்லையா?” “ இப்படி கேட்பதே தவறானது தேவி... இதை நீயும் அறிவாய்... இருந்தும் கேட்கிறாயே?” “என் கேள்விக்கு இதுவல்ல பதில்... நீங்களே என்னை பெரிதாக கருதத் தவறினால் அதை விட இழிவு கிடையாது.” “உயர்வு தாழ்வு கருதுவது பாவம் என சொல்லத்தக்க கல்வியை உடைய நீயா இப்படி பேசுகிறாய்?” “இப்படி கேட்டபடியே இருப்பதற்கு எது பெரியது என சொல்லலாமே?” “அப்படி கூறினால் அது என்னை நானே புகழ்ந்தது போலாகும்?” “உங்களையே சம்மதிக்க வைக்க முடியவில்லை... அப்படி இருக்க உங்கள் படைப்பில் உருவான உயிர்கள் மட்டும் எப்படி சம்மதிப்பர்?” “எதனால் கோபம் என கேட்ட என்னையே கோபம் கொள்ள வைப்பது போல் பேசுகிறாயே?” “படைப்புக் கடவுளான உங்களிடமே பதில் கிடைக்கவில்லையே?” என்ற வாணியின் பார்வை பிரம்மாவின் சிருஷ்டி தண்டம் என்னும் தண்டக்கோல் மீது விழுந்தது.