பழநி: பழநி முருகன் கோயிலில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் கார்த்திகையில் பாலாலய பூஜையுடன் துவங்க உள்ளது.
பழநி முருகன் கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆகமவிதிப்படி 12 ஆண்டுகள் முடிந்துவிட்டது. விரைவில் கும்பாபிஷேக திருப்பணிகளை துவங்க பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து கோயிலின் பழமை மாறாமல் தேய்மானம், சேதமடைந்துள்ள கற்சிலைகள், துாண்கள், சுதைகளை புதுப்பிக்க அறநிலையத்துறை, திருப்பணி குழு, ஸ்தபதிகள், பொறியியல், தொல்லியல்துறை, வல்லுனர் குழுவினர் கற்சிலைகள், மண்டபத்துாண் சுதைகளை ஆய்வு செய்துள்ளனர். அவர்களது ஆய்வு அறிக்கைப்படி ஆவணியில் பாலாலய பூஜையுடன் திருப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில் அதை கார்த்திகை மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில் நவராத்திரிவிழா அதனைத் தொடர்ந்து சஷ்டிவிழா நடைபெற உள்ளதால் கும்பாபிஷேக திருப்பணிகளை கார்த்திகை மாதம் துவங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.