பதிவு செய்த நாள்
10
செப்
2019
11:09
திருச்சி: ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில், பவித்ர உற்வசம் எனப்படும் நுாலிழை திருநாள் நேற்று துவங்கியது.பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும், பவித்ர உற்வசம் எனப்படும் நுாலிழை திருநாள், ஒன்பது நாட்கள் நடக்கும்.
பவித்ர உற்சவத்தின் போது, அனைத்து சன்னிதிகளிலும் உள்ள மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு நுாலிழைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதால், இதை நுாலிழை திருநாள் எனவும் குறிப்பிடுகின்றனர்.இந்த ஆண்டுக்கான, பவித்ர உற்வசம் துவக்க நாளான, நேற்று காலை, 9:15 மணிக்கு, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, யாகசாலை வந்தடைந்தார். அங்கு பரப்பி வைக்கப்பட்டிருந்த மலர்களுக்கு நடுவே, நம் பெருமாள் எழுந்தருளினார்.இரவு, 7:00 மணி முதல் திருமஞ்சனம், அலங்காரம் கண்டருளிய நம்பெருமாள், இரவு, 11:00 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று, மதியம், 2:00 முதல், 6:00 மணி வரை, நம்பெருமாள், பூச்சாண்டி சேவை சாதிப்பார். இந்த சேவையின் போது, ரெங்கநாதரின் திருமேனி முழுவதும் நுாலிழைகளை, சுருள் சுருளாக வைத்து அலங்கரித்திருப்பர். பார்ப்பவர்களை அச்சமூட்டுவது போன்ற இந்த அலங்காரத்தையே, பூச்சாண்டி சேவை என்கின்றனர்.