பதிவு செய்த நாள்
19
செப்
2019
12:09
கரூர்: ’பசுபதீஸ்வரர் கோவிலை தூய்மையாக பராமரிக்க வேண்டும்’ என, கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வெளிப்பிர காரத்தில், ஒரு பக்கம் கடைகள் கட்டப்பட்டிருந்த போது அமைதியும் தூய்மையும் கெடும் என, அவை இடிக்கப்பட்டன. தற்போது, அந்த இடத்தைத் தாண்டி புதிய கடைவீதியே உருவாகி உள்ளது. பழைய கடை இருந்த இடம் கடைகளின் குடோனாக மாறி உள்ளது. அதை அகற்றி விட்டு, அங்கு பூச்செடிகளை நட வேண்டும். ராஜராஜேஸ்வரி கோவில் எதிரே, சுற்றுவட்ட நடை பாதை, 300 அடிக்கு மணல் குவியலாக, குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இன்னும், 20 நாட்களில், எறிபத்த நாயனார் விழா நடக்கிறது.
அதில், தமிழகம் முழுவதும் இருந்து, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து கூடி, பூக்குடலையுடன் கோவிலை வலம் வருவர். அதற்குள்ளாக கோவில் செயல் அலுவலர், நகராட்சி மற்றும் கலெக்டர் மூலம் துரித நடவடிக்கை எடுத்து, இப்பாதையை சீர்படுத்த வேண்டும். அதே பகுதியில் பெரிய மதில் சுவருக்கும் வெளிப்புற சுற்றுச்சுவருக்கும் இடையே, காய்ந்த மரங்கள், சருகுகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தி விட்டு, அங்கு பூந்தோட்டமோ அல்லது யாத்ரிகர்கள் தங்கும் கூடமாகவோ மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.