பதிவு செய்த நாள்
05
ஏப்
2012
12:04
சேலம்: இன்று பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு, முருகன் கோவிலில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. சேலம் குமரகிரி தண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில், சண்முகப்பெருமான் மாட வீதி உலா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இன்று சண்முகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. மாட வீதி உலா நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக சென்று, ஸ்வாமி வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். காலை 6 மணிக்கு ஸ்வாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடக்கிறது. பகல் 11 மணிக்கு சிறப்பு பக்தி சொற்பொழிவு நடக்கிறது. பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஞானமணி, செயல் அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர். பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, அம்மாபேட்டை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், கந்தாஸ்ரமம், ஊத்துமலை முருகன் கோவில், அழகாபுரம் முருகன் கோவில், பட்டைகோவில் முருகன் கோவில்களிலும் சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.