கும்பகோணம்: கும்பகோணம் மங்களாம்பிகை உடனாய ஆதிகும்பேசுவர சுவாமி திருக்கோவிலின் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா மகாமகக்குளத்தில் இன்று 5ம்தேதி காலை, மாலை நடைபெற உள்ளது. பிரளய காலத்தில் கும்பகோணம் ஆதிகும்பேசுவர சுவாமி கோவில் உலகில் முதன் முதலாக தோன்றியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. இத்தகைய சிறப்புடைய இக்கோவிலில் மந்திர பீடேஸ்வரியாக மங்களாம்பிகை அம்மன் இறைவனின் இடது பாகத்தில் சன்னதி கொண்டுள்ளார். கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும் தங்கள் பாவங்களை போக்கிக்கொள்வதற்காக மகாமககுளத்தில் புனித நீராடி ஈசனையும், அன்னையையும் தரிசித்து பேறுபெற்றதாக ஐதீகம். அத்தகைய சிறப்பு பெற்ற மகாமக குளத்தில் ஈசனின் தேவியாக எழுந்தருளியுள்ள மலைமகளான மங்களாம்பிகை எனும் மந்திரபீடேஸ்வரிக்கு அலைமகளும், கலைமகளும் சாமரம் வீச ஆண்டுதோறும் பங்குனிஉத்திர பெருவிழாவை முன்னிட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மங்களாம்பிகை பவனிவந்து அருள்பாலிக்கும் தெப்பத்திருவிழா கண்டருளும் நிகழ்ச்சி இன்று காலை 10.15 மணிக்கு மேல் 11 மணிக்குள்ளும், இரவு 6மணிக்கு மேல் 7.30மணிக்குள் நடைபெற உள்ளது. தெப்பத்தில் சிறப்பு நாதஸ்வரம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், தக்கார் மோகனசுந்தரம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றது.