திருநெல்வேலியிலுள்ள நரசிங்கப்பெருமாள் கோயிலில் பக்தர்கள் செவ்வாய் தோஷம் நீங்க நீராஞ்சன தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அசுரன் இரண்யனின் மகன் பிரகலாதன். இவன் கருவில் இருக்கும் போதே விஷ்ணு பக்தன். தெய்வ நம்பிக்கை யற்ற இரண்யனோ மகனையே கொல்ல துணிந்தான். பக்தனைக் காக்க முடிவெடுத்தார் மகாவிஷ்ணு. ஆனால் மனிதர், மிருகம், பிற சக்திகளால் தனக்கு அழிவு நேரக் கூடாது என வரம் பெற்றிருந்தான் இரண்யன்.
எனவே சிங்க முகமும், மனித உடலும் கொண்டு நரசிம்மராக தோன்றி நகத்தால் உடலைப் பிளந்து கொன்றார். மகாவிஷ்ணுவின் உக்கிரத்தை தாங்க முடியாமல் அனைவரும் பயந்தனர்.
சுவாமியின் மடியில் மகாலட்சுமி அமர்ந்த பின்னரே கோபம் தணிந்தார் மகாவிஷ்ணு. இந்த கோலத்திற்கு ’லட்சுமி நரசிம்மர்’ என பெயர் ஏற்பட்டது. எட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டிய மன்னர்கள் நரசிம்மருக்கு கோயில் கட்டினர். இங்கு மகாலட்சுமி, சுவாமியின் தோளில் கை வைத்தும், அவரைப் பார்த்தபடியும் இருப்பது சிறப்பு. பக்தர்களின் குறையை போக்கவே, சுவாமியின் மீது வைத்த கண்ணைத் திருப்பாமல் தாயார் இருப்பதாக ஐதீகம். நரசிம்மர் கோயில் என்றாலும் சுவாமிக்கு சிங்கமுகம் இல்லை.
சாந்தமாக மனித முகத்துடன் இருப்பதால் ’பிரகலாத வரதன்’ எனப்படுகிறார். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்கள் இங்கு நீராஞ்சன தீபம் ஏற்றுகின்றனர். இதற்காக அரிசியை பரப்பி அதன் மீது தேங்காய் முடியில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றுகின்றனர். கடன், வழக்கு, நிலப்பிரச்னை தீரவும், வியாபாரம் பெருகவும் சுவாதி நட்சத்திரத்தன்று பானகம் படைக்கின்றனர்.