பதிவு செய்த நாள்
23
செப்
2019
05:09
அந்த சிருஷ்டி தண்டம் என்னாகும் என்ற கேள்விக்கு புன்னகைத்த மகாவிஷ்ணு, ”அது வாணியின் கைபட்டதும் தன் சக்தியை இழந்தது. சிருஷ்டி தண்டம் பிரம்மனுக்கே உரியது. ஒருவருக்கு உரிய ஒன்றை அவர் விரும்பாத நிலையில் மற்றவர் எடுப்பது திருட்டுக்கு சமம். இதனால் வாணி தோஷத்திற்கு ஆளானாள்” என மகாலட்சுமியை அதிரச் செய்தார்.
”தங்கள் திருவிளையாட்டு வாணியை இப்படி கூடவா ஆக்கும்?” என வருத்தமுடன் கேட்டாள் மகாலட்சுமி.
”வலி இல்லாமல் பிரசவம் இல்லை தேவி... அது போல உளி செதுக்காமல் சிலை இல்லை, பலி இல்லாமல் வரம் இல்லை, ஒலி இல்லாமல் மந்திரங்கள் இல்லை, மானுடம் பக்தி நெறியோடு வாழச் செய்யும் செயல்களின் முடிவை மட்டும் பார். இந்த செயல் என்பது நல்ல விளைவுக்காகவே” என்ற மாலவன் கருத்தை ஏற்ற மகாலட்சுமி ”தேவராஜனான உங்களை நானும் வரதராஜனாக காண ஆவல் கொண்டுள்ளேன்” என்றாள்.
அத்திகிரி! கிருத யுகம், ஐந்தாம் மனுவின் காலம், வைகாசி மாதம்... இந்திரனின் முயற்சியால் உருவான கோயிலில் தினமும் ஆகம முறைப்படி பூஜைகள் நடந்தன. கோயிலின் மேற்குபுறம் நரசிம்மரின் சன்னதியில் எழுந்தருளினார் பிரம்மா. தேவசிற்பியான மயன் மூலம் யாக குண்டம் அமைத்தான்.
குண்டம் அமைக்கப்பட்டு அக்னி வளர்த்த நாளில் இருந்து, ஒரு வருடம் அணையாது எரிந்தபடி இருக்க வேண்டும் என்பது யாகத்திற்கான விதி. இயற்கையாகவோ, செயற்கையாகவோ யாகம் தடைபடாமல் இருக்க விநாயகரை பிரதிஷ்டை செய்து அவரிடம் சங்கல்பம் செய்து கொண்டார் பிரம்மா.
அஸ்வம் என்னும் குதிரைதான் யாகத்தின் மூலப்பொருள். வெள்ளை நிறமும், நெற்றியில் கருப்பு மச்சமும் கொண்டதாக அது இருக்க வேண்டும். குதிரை பிறந்தது முதல் யாரும் அதன் மீது ஏறி அமர்ந்திருக்க கூடாது. ஒரு தாய்க்கு பிறந்த ஒரே குட்டியாக இருக்க வேண்டும். அப்படி ஒரு குதிரையை அலங்கரித்து, அதன் முதுகு மீது தங்க இழைகள் சேர்த்த நீலநிற ஆடையும், நெற்றியில் நேத்ர படம் என்னும் பட்டயம் கட்டி, காலில் வெள்ளிக் கவசம் அணிவிக்க வேண்டும். இந்தக் குதிரை பூமண்டலத்தை சுற்றி வரும் போது அதன் காவலன் மற்றும் அவனைச் சார்ந்த நுாறு பேர் பின் தொடர வேண்டும்.
இவ்வாறு குதிரை வரும் போது யாரும் அதை தன் வசப்படுத்தக் கூடாது. மீறினால் போர் தொடுத்து வெற்றி பெற வேண்டும். அரசர்கள் மட்டுமின்றி யட்சர், கந்தர்வர், ராட்சஷர்களாலும் குதிரை கவரப்படலாம். எனவே அவர்களையும் வெல்ல வேண்டும். ஆனால் குதிரையைக் கண்ட அனைவரும் பிடித்துக் கட்டாமல் பிரம்மனுக்கு துணை நின்றனர். யாக சாலையில் ’பூபஸ்தம்பம்’ என்றொரு துாண் இருக்கும். அதில் குதிரையின் கழுத்து இறுகாதபடி பட்டுக்கயிறால் கட்டப்பட வேண்டும்.
இதைத் தொடர்ந்து ’புருஷ மேதம்’ என்றொரு கிளைச்சடங்கு நடக்கும். இதற்காக நால்வகை வருணத்தாருக்கு நான்கு மேடைகள் அமைத்திருப்பர். மிருகங்கள், பறவைகள், பூச்சிகள், மீன்கள், முதலைகள் என பல்வேறு உயிர்களும் அவற்றின் தன்மைக்கேற்ப கட்டப்பட்டிருக்கும். அவற்றை யாரும் இடையூறு செய்வது கூடாது.
இதை ஒட்டி 11 மேடைகளில் பலவித தொழில் செய்யும் குலத்தவர்கள் 185 என்னும் எண்ணிக்கைக்கு குறையாமல் இருக்க வேண்டும். இதன் பிறகே யாகம் தொடங்கப்பட வேண்டும். யாகத்தை முன் நின்று நடத்துபவர் ’கர்த்தா’ எனப்படுவார். கர்த்தா மணமானவர் என்றால் மனைவியோடு சேர்ந்து ’தேவ சேர்க்கை புரிதல்’ என்னும் சடங்கை நடத்த வேண்டும்.
இதில் சுப்பிரமணியர், மணிகண்டீசர், வருணன், எமதர்மன், சாதான்ஹிகர், ரிஷிகள், கந்தர்வ, யட்ச, கின்னரர், அச்பரர், சித்த சாத்தியர் போன்றோருக்கு அவரவருக்கு உரிய பொறுப்பை கொடுக்க வேண்டும். கணாத்யட்சர், க்ஷேத்திர பாலகர், யோக சிம்மர் முதலியோரை யாக காப்பாளர்களாக நியமிக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக யாகம் தொடங்கும் முன்பு மனைவி உடன் இருக்க வேண்டும். அவளை ஒதுக்கினால் பலன் ஏற்படாது. ஒருவேளை மனைவி பங்கேற்க மறுத்தால் அந்த இடத்தில் இன்னொரு பெண்ணை மனைவியாக நிறுத்தி யாகம் தொடங்கலாம்.
இந்நிலையில் தன் மகனான வசிஷ்டரிடம் சரஸ்வதியை அழைத்து வர பணித்தார் பிரம்மா. அவள் வந்ததும் யாகத்தை தொடங்க வேண்டியது தான்...
யாகத்திற்காக குதிரையும் பட்டுக்கயிறால் கட்டப்பட்டது. சரஸ்வதி வந்ததும் அவ்வளவு பேரும் யாகப் பசுக்களாக கருதப்பட்டு பலி நிவேதனம் செய்வர். பலி நிவேதனம் என்பது வெட்டிக் கொல்வது அல்ல! மந்திர முறைப்படி யாக மூர்த்தியான மகாவிஷ்ணுவுக்கு அர்ப்பணம் செய்வது. கத்தியின்றி, ரத்தமின்றி பலி கொடுக்கும் வழி உள்ளது. மாவினால் உருவம் செய்து அதை நெருப்பில் இட்டு பலியை நிறைவேற்றுவர்.
இப்படி எல்லாம் தயாரான நிலையில்...!
சரஸ்வதி காஞ்சியை ஒட்டிய வேகவதி நதிக்கரையில் தவம் செய்தாள். அவளைக் கண்ட வசிஷ்டர், ”மாதா சரணம்... தேவி சரணம்.. வாணி சரணம்..பிரம்ம பத்னி சரணம்”
”அடடே வசிஷ்டனா.. வா மைந்தா! நலமாக இருக்கிறாயா?”
” நலத்திற்கு என்ன குறை? ஆனால் உலகமே இப்போது ஒரு ஊனத்தில் இருக்கிறது. தாங்களும் அறிவீர்கள்...”
”என்ன சொல்கிறாய் நீ?”
”அம்மா...சிருஷ்டி தண்டத்தை எடுத்ததால் படைப்புத் தொழில் செய்ய முடியவில்லை. உலக இயக்கமே நின்று விட்டதே”
”ஓ..அதைச் சொல்கிறாயா? அது சரி... உன்னை ஒன்று கேட்கிறேன். வற்றாச் செல்வமான கல்வியை விட நிலையற்ற செல்வத்தை பெரிதாக கருதுவது குறையில்லையா?”
”தாயே... அது ஒரு திருவிளையாடல்! இது பெரிது அது சிறிது என மாயையில் சிக்கிய மனிதர்கள் நினைக்கலாம். தேவ தேவியான தாங்கள் அப்படி எண்ணலாமா?”
”வசிஷ்டா... இப்படிப்பட்ட மயக்கம் நமக்கும் வந்ததே என் வேதனை”
”இல்லை தாயே! தங்களுக்கு தெரியாதது இல்லை. மகாலட்சுமி விளையாட்டாக பேசியதை பொருட்படுத்த வேண்டாம். தங்களின் வருத்தம் தந்தையான பிரம்மாவை யாகம் நடத்தச் செய்து விட்டது”
”கேள்விப்பட்டேன். இப்போது கூட நான் இல்லாமல் யாகம் தொடங்கக் கூடாது என்பதற்காகவே தூது அனுப்பியுள்ளார். என்னைக் காண அவர் விரும்பவில்லை என்பதையும் தான் பார்க்கிறேனே!”
”தாயே! யாகப்பணியில் இருப்பதால் அவர் எதற்கு என்றே நான் வந்தேன்”
”வசிஷ்டா... நன்கு சமாளிக்கிறாய். ஆனாலும் எனக்கு சமாதானம் இல்லை. கல்வி விளையாட்டுப் பொருள் அல்ல... அதுவே ஞானம், தெளிவு, நிம்மதி தரக் கூடியது”
”அம்மா... தங்களின் கருத்தை ஏற்கிறேன். செல்வமே பெரிது என கருதினால் நானும் குபேரன் ஆகியிருப்பேனே! இப்படி தவசியாக திரிய மாட்டேன். நானும் சரி, தந்தையும் சரி தெளிவாகவே உள்ளோம்”
”அப்படியானால் என்னைக் காண அவர் வந்திருக்கலாமே?” கோபமாக கேட்டாள் வாணி.