பதிவு செய்த நாள்
01
அக்
2019
12:10
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான செண்பகதோப்பு, பிளவக்கல் அணை, சதுரகிரி பகுதிகளில், 12 மணி நேரத்தில், 14 செ.மீ., மழை பெய்ததால், சதுரகிரி மலை கோவில் சென்ற, 45 பக்தர்கள், இறங்கமுடியாமல் தத்தளிக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் செண்பகதோப்பு வனப்பகுதியில், நேற்று முன்தினம் மாலை துவங்கிய மழை, நேற்று காலை, 7:00 மணி வரை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்துார் வடபத் ரசயனர் கோவிலின் கொடிமரம் மற்றும் பிரகாரங்களில், மழைநீர் புகுந்தது. செண்பகதோப்பு வனப்பகுதியில் பெய்த மழையால் காட்டழகர், பேயனாறு, அத்திதுண்டு ஓடைகளில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. பிளவக்கல் அணையில், 4 அடி தண்ணீரே இருந்த நிலையில், ஒரே நாளில், 13 அடி அதிகரித்தது. கூமாபட்டி நெடுங்குளம் சாலையில், மதன்குமாரின் கோழிப் பண்ணையில், மழைநீர் புகுந்ததால், 5,000 கோழிகள் பலியாகின. தாணிப்பாறை ராம்நகரை சேர்ந்த, பெருமாள், 80, என்பவர், கான்சாபுரத்திலிருந்து, அத்திக்கோவில் செல்லும் சாலையில், பண்டாரபாறை ஓடை அருகே, மழைநீரில் அடித்து செல்லப்பட்டு இறந்தார்.
வத்திராயிருப்பு மேலபாளையம் பகுதியில், ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிக்குள், மழைநீர் புகுந்ததால், 150க்கும் மேற்பட்டவர்கள் பரிதவித்தனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், நவராத்திரி பூஜைக்காக, ஊழியர்கள் உட்பட, 45 பக்தர்கள், மலையில் தங்கியிருந்தனர். மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, வழுக்குபாறை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அவர்கள் கீழே இறங்க முடியவில்லை.