பதிவு செய்த நாள்
07
ஏப்
2012
10:04
நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நேற்று மாலை நடந்த புனித வெள்ளி இறைவழிபாடு நிகழ்ச்சியில் ஏராளமானோர் நற்கருணை ஆசிர் பெற்றனர்.
வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா ஆலயத்தில், ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினமான நேற்று, சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனைகள், இறை வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தன. அதிகாலை 5 மணிமுதல் மாலை 5 மணி வரை திவ்ய நற்கருணை ஆராதனைகள் பல்வேறு தரப்பினரால் நடத்தப்பட்டது.
பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து 12 மணி நேரம் திவ்ய நற்கருணை ஆராதனை நடத்தினர். ஆலய திருத்தல கலையரங்கில் மாலை 6 மணிக்கு ஆலய அதிபர் மைக்கேல், பங்கு பாதிரியார் ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட 10 பாதிரியார்கள் தலைமையில் இறை வழிபாடு,பொது மன்றாட்டு, சிலுவை ஆராதனை நடந்தது.
சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிறிஸ்துவின் பாதங்களை தொட்டு பாதிரியார்கள் சிலுவை முத்தி செய்தனர். தொடர்ந்து மரித்த ஏசு கிறிஸ்துவின் உடல் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு தேவாலய கீழ் கோவிலுக்கு பவனியாக எடுத்து செல்லப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டது.
புனித வெள்ளியை தொடர்ந்து இன்று புனித சனி துக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் தேவாலய கோவில்களில் திருப்பலியோ, சடங்குகளோ நடைபெறாது. இரவு 10.45 மணிக்கு தேவாலய திருத்தல கலையரங்கில் பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காலை 6.30 மணி முதல் மாலை 6 மணி வரை பல்வேறு மொழிகளில் திருப்பலிகள் நடைபெறும். மாலை 6.45 மணிக்கு உயிர்த்த ஏசு கிறிஸ்து தேர்பவனி நடக்கிறது. 7.45 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசிர், பாதிரியார்களால் வழங்கப்படுகிறது.
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா சர்ச்களில் நள்ளிரவு கொண்டாட்டம்
திண்டுக்கல் : இறப்பை வென்று மறுவாழ்வை மெய்ப்பித்தவர் என்பதற்கு அடையாளமாக, இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா கொண்டாட்டம், இன்று நள்ளிரவு நடக்கிறது. கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் கடைப்பிடித்து வந்த தவக்காலம், இன்று இரவுடன் நிறைவுபெறுகிறது. மக்களின் பாவச்சுமையை களைவதற்காக, சிலுவை சாவுக்கு இயேசு அர்ப்பணித்ததை நினைவு கூரும் வகையில், ஒருவேளை நோன்பு இருந்தனர்.
தங்கள் உடலை வருத்தி பாவமன்னிப்பிற்காக ஜெபித்துக்கொண்டிருந்த பக்தர்கள், இன்று இரவு, இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடுவர். இதன் மூலம் தவக்காலத்தை நிறைவு செய்து தூய்மையான வாழ்வை தொடர்வதாக திருப்பலி வழிபாட்டில் உறுதிகொள்வர். திண்டுக்கல் புனித வளனார் கதீட்ரல் ஆலயத்தில், இன்று இரவு 11 மணிக்கு, உயிர்ப்பு பெருவிழா நிகழ்ச்சிகள் துவங்கும். நள்ளிரவு 12 மணிக்கு இயேசுவின் உயிர்ப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது மின் விளக்குகள் அணைக்கப்பட்டு, இயேசு உயிர்த்தெழுந்தவுடன் மீண்டும் எரியவிடப்படும். கிறிஸ்து ஒளியாக இருக்கிறார் என்பதற்கு அடையாளமாகவும்; இறப்பை வென்று மறுவாழ்வை மெய்ப்பித்தவர் என்பதை நிரூபிக்கவும் இந்நிகழ்ச்சி நடக்கும்.
பக்தர்கள் கொண்டு வரும் மெழுகுவர்த்திகளை, திருப்பலி பீடத்தின் முன், ஏற்றப்பட்டிருக்கும் பாஸ்கா ஒளி விளக்கில் இருந்து எரியச்செய்வர். வழிபாடு முடிந்து வீட்டிற்கு செல்லும் வரை அதை அணையாமல் பார்த்துக் கொள்வர். ஞானஸ்நானத்தால் ஜென்மபாவத்தில் இருந்து விடுபட்டதை மீண்டும் நினைவுபடுத்தி, அதே பாவத்தில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதிமொழி மேற்கொள்வர். இதற்கு அடையாளமாக திருப்பலி நிறைவேற்றும் பிஷப், அங்கு வைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய அண்டாக்களில் உள்ள தண்ணீரை ஆசிர்வதித்து, பக்தர்களின் மேல் தெளிப்பார். வழிபாடு முடிந்ததும் தண்ணீரை பக்தர்கள் பாத்திரங்களில் எடுத்துச் சென்று, வீடுகளில் பத்திரப்படுத்தி கொள்வர்.