பதிவு செய்த நாள்
17
அக்
2019
11:10
மாமல்லபுரம்: மாமல்லபுரம் பல்லவ சிற்பங்கள், தொல்லியல் துறை தலைமையக உத்தரவிற்கு பிறகே, மின்னொளியில் ஒளிரும் என, அத்துறையினர் தெரிவித்துள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால, கடற்கரைக் கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடைவரை சிற்பங்களை, பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங், 11ம் தேதி சந்தித்தனர்.
தலைவர்கள் சந்திப்பு: இவர்களை கவர, சிற்பங்களை பராமரிக்கும் மத்திய தொல்லியல் துறை, சிற்ப பகுதிகளில், வண்ண விளக்குகளை அமைத்தது. விளக்கின் வெளிச்சத்தில், சிற்பங்கள் ஒளிர்வதை பார்த்து, இரு நாட்டு தலைவர்கள் மிகவும் ரசித்தனர்.பல ஆண்டுகளுக்கு முன், சிற்ப பகுதிகளில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது; நாளடைவில் கைவிடப்பட்டது.இரு நாட்டு தலைவர்கள் வருகைக்கு பின், சிற்பங்கள் ஒளிர்வது தொடரும் என, சுற்றுலா பயணியர் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால், பிரதமர் - சீன அதிபர் சென்றதும், சிற்ப பகுதிகளில் இருந்த, 1,000க்கும் மேற்பட்ட விளக்குகள் அகற்றப்பட்டன. இது குறித்து, தொல்லியல் துறையினர் கூறியதாவது:பிரதமர் - சீன அதிபர், வருகைக்காக, சிற்ப பகுதிகளில், விளக்குகள் அமைத்து, இரவிலும் ஒளிர வைத்தோம். இரவில், தொடர்ந்து ஒளிர வைக்க, நாங்கள் தயாராகவே உள்ளோம்.
அனுமதி நீட்டிப்பு?: காலை, 6:00 - மாலை, 6:00 மணி வரையே, பயணியரை அனுமதிக்க, உத்தரவு உள்ளது.இரவு, 10:00 மணி வரை, விளக்குகள் ஒளிர வைத்து, பயணியர் அனுமதி நேரத்தை நீட்டிக்க, டில்லியில் உள்ள துறை தலைமையகம் உத்தரவிட வேண்டும்.நுழைவுக் கட்டண மைய ஊழியர்கள், பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டதும், இரவில் பயணியரை அனுமதிக்க, துறை தலைமையகம் உத்தரவிடும்; அதற்காக எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.