வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
மழைக்கு அதிபதியாக விளங்கும் முத்தாலம்மனுக்கு இப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து விழா எடுத்து வழிபடுவது வழக்கம்.அதன்படி இவ்விழா கடந்த 9ம் தேதி துவங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா நேற்று நடந்தது. இதையொட்டி முதல்நாள் இரவு அம்மன் கண் திறப்பு வைபவம் நடந்தது. தொடர்ந்து மண்டபத்தில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அதிகாலை ஒரு மணிக்கு அம்மன் அங்கிருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார்.
பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, பலரும் ஆடு, கோழி பலியிட்டும் மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர் ரத வீதிகள் வழியாக சென்று பகல் 2:30 மணிக்கு நிலைக்கு வந்தது.மேளதாளங்கள் முழங்க அம்மன் தேரில் இருந்து இறங்க ஊர்வலமாக கோயிலை சென்றடைந்தார். அங்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது. பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றியும் பொம்மை சிற்பங்கள் செலுத்தியும் வழிபட்டனர். இரவு மாவிளக்கு வழிபாடுடன் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. இறுதியாக அம்மனை முத்தாலை ஓடையில் கரைப்பதற்காக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்றனர். பக்தர்கள் கோயிலை சுற்றிலும் நின்று மலர்களை துாவி அம்மனை வழியனுப்பி வைத்தனர்.