பதிவு செய்த நாள்
26
அக்
2019
11:10
மாமல்லபுரம்: பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங், மாமல்லபுரம் வந்தபோது, அவர்களை கவர, கடற்கரைக்கோவில் நுழைவிடத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை, நிரந்தரமாக இருக்க, பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங், 11ம் தேதி, மாமல்லபுரத்தில் சந்தித்து, இரு நாட்டு உறவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் பேச்சு நடத்தினர்.சீன அதிபரை கவர, அந்நாட்டின், பவுத்த மதம் கருதி, கடற்கரைக்கோவில் நுழைவிடம், ஐந்து ரதங்கள், கைவினை வணிக வளாக புல்வெளி ஆகிய பகுதிகளில், புத்தர் கற்சிலைகள், யானைகளுடன் வைக்கப்பட்டன. அவர்கள் சென்றதையடுத்து, வணிக வளாக புல்வெளி பகுதி சிலைகளை மட்டும் அகற்றி, கடற்கரைக்கோவில் பகுதி, புத்தர் சிலை நீடிக்கிறது. சுற்றுலாப் பயணியர், இதை கண்டு ரசித்து, இதன்முன் நின்று, செல்பி புகைப்படம் எடுக்கின்றனர்.இச்சூழலில், பயணியர் விருப்பம் கருதி, சிலையை நிரந்தரமாக வைக்க, பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இது குறித்து, செயல் அலுவலர், லதா கூறிய தாவது:பிரதமர் - சீன அதிபர் சந்திப்பிற்காகவே, புத்தர் சிலை வைத்தோம். சுற்றுலாப் பயணியர், இதையும் ரசித்து காண்கின்றனர். தனியார் சிலையை, வாடகைக்கு பெற்றே வைத்தோம். நிரந்தரமாக சிலை இருக்க, பயணியர் விரும்புகின்றனர்.இது குறித்து, மாவட்ட கலெக்டருடன் ஆலோசித்து, சிலையை விலைக்கு வாங்கி, நிரந்தரமாக வைக்க முடிவெடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.