கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2012 11:04
கோவில்பட்டி : கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடக்கிறது. செண்பகவல்லியம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டப்பட்டு கடந்த ஜன.29ந்தேதி மகாகும்பாபிஷேகம் நடந்த பின்னர் தமிழக அளவில் பிரசித்த பெற்ற சிவத்தலமாக மாறியுள்ளது. இந்தாண்டு வழக்கமான உற்சாகத்துடன் கடந்த 4ந்தேதி பங்குனிப் பெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர் முறையில் சிறப்பு பூஜைகள், சுவாமி அம்பாள் திருவீதிவுலா உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் நடந்து வந்தன. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (ஏப்.12) மாலையில் தேர்திருவிழா நடக்கிறது. இதையொட்டி அதிகாலையில் ரதாரோகணம் மற்றும் சுவாமி அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளல் பூஜைகள் நடக்கிறது. மாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்த கோஷங்களுக்கு மத்தியில் தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அறநிலையத்துறை அரசு செயலர் ராஜாராம் தலைமை வகிக்கிறார். கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர்ராஜூ, ஜிவிஎன் கல்லூரி செயலர் செல்வராஜ், யூனியன் துணை சேர்மன் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஸ்குமார், எஸ்பி ராஜேந்திரன் கலந்து கொண்டு தேர்வடம் பிடிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில்பட்டி கம்மவார் சங்க தலைவர் துரைராஜ், செயலாளர் சங்கரசுப்பு, பொருளாளர் கனகராஜ், துணை தலைவர் ராஜேஷ்சந்திரன், இணைச்செயலாளர் பால்ராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.