திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த அருணாபுரம் கூத்தாண்டவர் கோவிலில் அரவாண் களப்பலி நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த அருணாபுரத்தில் கூத்தாண்டவர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 15 நாட்களாக நடந்து வருகிறது. தினசரி மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு அரவாணிகள் தாலிக்கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி கூத்தாண்டவர் இந்திர விமானத்தில் திருமண கோலத்தில் வான வேடிக்கையுடன் வீதியுலா நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு சுவாமி பிரம்மாண்ட உருவத்தில் யுத்த கோலத்தில் தேர்வடிவில் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலிகொடுத்து நேத்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தபோது களப்பலி உற்சவம் நடந்தது. அரவாணிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.