கிருஷ்ணகிரி: பெரியமுத்தூர், கருமலை கந்தவேலர் கோவிலில் ஐப்பசி மாத சஷ்டி பெருவிழா நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்தூர் கருமலை கந்தவேலர் ஆலய, ஐப்பசி மாத சஷ்டி பெருவிழா கடந்த மாதம், 28ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், மூலவர் திருக்குட நன்னீராட்டும் நடந்தன. பெருவிழா அன்று காலை, பேரொளி வழிபாடு நடந்தது. பின்னர் சூரசம்ஹாரம் குறித்து திருமுறை வித்தகர் கல்யாண சுந்தரம் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். மாலை நாடக ஆசிரியர் தின்னக்கழனி மணி குழுவினரின் சூரசம்ஹாரம் மற்றும் சூரபத்மனை முருகன் வதம் செய்யும் நேரடி நாடக நிகழ்ச்சி நடந்தது. மேலும், வேல் அபிஷேகமும், அதை தொடர்ந்து மலைக்கோவில் வழிபாடும் நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பெரியமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.