பதிவு செய்த நாள்
16
ஏப்
2012
10:04
மேலூர்:மேலூர் அருகே தும்பைப்பட்டி, வெள்ளலூரில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு நேற்று நடந்த விழாக்களில் அனைவரும் சமம் என்பதை காட்ட அனைத்து சமுதாயத்தினருக்கும் வெற்றிலை, பாக்கு கொடுத்து "முதல் மரியாதை செய்யப்பட்டது. மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விழாக்கள் நடந்தன. தும்பைப்பட்டி ஊராட்சியில் சித்திரை முதல் நாளில், தெற்குவளவு மந்தையில் கிராம அம்பலகாரர்கள் தலைமையில் அனைத்து ஜாதி, இன மக்கள் கூடுவர். அனைவரும் சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்கப்படுவர். பின் ஊர் கணக்கப்பிள்ளை, ஒவ்வொரு பிரிவினர் மற்றும் சுற்றியுள்ள மேலூர், கீழையூர், பூதமங்கலம் ஊர் மக்களை அழைப்பார். தும்பைப்பட்டி பள்ளிவாசல் நோட்டம் பொறுப்பில் உள்ள முஸ்லிம் பிரமுகர், வெற்றிலை, பாக்குகளை அனைவருக்கும் வழங்குவார். ஆண்டு முழுவதும் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன், சிறப்புடனும் செயல்பட வேண்டும் என்பதற்காக இவ்விழா நடத்தப்படுகிறது. நேற்று நடந்த விழாவில் அனைத்து தரப்பினருக்கும் இம்மரியாதை செய்யப்பட்டது.
800 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம் என கிராமத்தினர்: தெரிவித்தனர். வெற்றிலை பிரி திருவிழா:மேலூர் அருகே உள்ள வெள்ளலூர், 54 கிராமங்களுக்கு தலைமையிடமாக கருதப்படுகிறது. சித்திரை பிறப்பை முன்னிட்டு, இங்குள்ள மந்தையில் மக்கள் முன்னிலையில் நேற்று ஒரு டன் வெற்றிலை கொண்டு வந்து குவிக்கப்பட்டது. ஒவ்வொரு கிராம அம்பலகாரர்களுக்கும் தனித் தனியாக வெற்றிலை கட்டுகள் வழங்கப்பட்டன. அவற்றை தனித் தனியாக பிரித்து, திருமணமான ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டன. இவ் வெற்றிலை அனைத்து சமுதாய மக்களுக்கும் பிரித்து கொடுக்கப்படும். மக்கள், வழங்கப்பட்ட வெற்றிலையை வீட்டில் வைத்து படையல் செய்தனர். பின் வயலுக்கு சென்று சாமி கும்பிட்டு, விவசாய பணிகளை துவக்கினர்.