குலசை முத்தாரம்மன் கோயிலில் சமய சொற்பொழிவு திடீர் நிறுத்தம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2012 10:04
உடன்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் கடந்த 10 வருடமாக செவ்வாய்கிழமை தோறும் நடந்த சமய சொற்பொழிவு திடீரென நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து சமய சொற்பொழிவு நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தமிழ்நாட்டில் பிரசித்திப் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு நடக்கும் தசரா திருவிழா இந்தியாவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. பிரசித்திப் பெற்ற இத்திருத்தலத்தை தரிசிக்க தினசரி இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக செவ்வாய்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் மாதாந்திர செவ்வாய் கிழமையன்று கோயிலுக்கு வந்து செல்வர்.ஏராளமான பக்தர்கள் கூட்டம் இருப்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த 10 வருடமாக சமய சொற்பொழிவு செவ்வாய்கிழமை தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடந்தது. இந்த சமய சொற்பொழிவை கேட்பதற்கு ஏராளமான ஆன்மிக அன்பர்கள், பக்தர்கள் கோயிலுக்கு வருவர். இந்நிலையில் திடீரென ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியை நிறுத்திவிட்டதாக தெரிகிறது.இதனால் சொற்பொழிவை கேட்க வந்த ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பக்தர்களின் நலன் கருதி செவ்வாய்கிழமை தோறும் நடந்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.