பசுவந்தனை:பசுவந்தனை கைலாசநாதர் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் நந்தன வருட பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடந்தது.பசுவந்தனை சுயம்புலிங்கம் கைலாசநாதர் சமேத ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜையை தொடர்ந்து கணபதி பூஜை மற்றும் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் சுவாமி, அம்மன், சோமாஸ்கந்தர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், பால், பன்னீர் வாசனை திரவியங்கள் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. அதன் பின்னர் தமிழக அரசின் உத்தரவின் படி இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கால பைரவருக்கு அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது.அதனை தொடர்ந்து நந்தன வருட பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரையுள்ள வருட பலன்களை பரசுராம பட்டர் வாசித்தார். நிகழ்ச்சியில் பசுவந்தனை மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்த பெருமாள் தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.