சுசீந்திரம்:நாஞ்சில் நாட்டில் கோடிகள் செலவிட்டு உருவாக்கப்படும் கோயில்களால் இப்பகுதி கோயில் நகரமாக மாறி வருகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தின் நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியான நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகளில் கோடிகள் செலவில் பிரமாண்டமான கோயில்கள் உருவாகி வருகின்றன. ஏற்கனவே இந்த பகுதியில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், பறக்கை மதுசூதன பெருமாள் கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் திருப்பதி திருவாழ்மார்பன் கோயில், போன்ற பிரபல கோயில்கள் அமைந்துள்ளன. இருளப்பபுரத்தில் பசுபதீஸ்வரர் கோயில் பெரிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் முடிந்து, ஏராளம் பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர்.பொற்றையடியில் இரண்டு கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட சாய்பாபா கோயில் தற்போது கும்பாபிஷேகம் முடித்து பக்தர்களின் தரிசனத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பயணிகளை வெகுவாக கவருகிறது.இதுபோல் தன்னியாகுமரி வட்டக்கோட்டை அருகே பல கோடி ரூபாய் செலவில் தத்தாத்ரேயர் கோயில் அமைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் மாதிரியில் கோயில் அமைக்கப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட திருப்பதி தேவஸ்தானம் இதற்கான மண் ஆய்வு பணிகளையும் துவங்கியுள்ளது.மேலும் இலந்தையடி கிரமத்தில் பல கோடி ரூபாய் செலவில் ஆந்திராவின் காளஹஸ்தி கோயில் வடிவில் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்காக நிலம் வாங்கப்பட்டு பணிகள் துவங்கும் நிலையில் உள்ளது.மேலும் சுசீந்திரத்தில் ராகவேந்திரர் கோயில் பணி நடந்து வருகிறது. இலந்தையடிதட்டில் மேல்மருவத்தூர் கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்டடு சக்தி பீடம் அமைப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. மேலும் பல அமைப்புகள் கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரம் பகுதிகளில் கோயில் கட்ட தீவிரமாக பொருத்தமான நிலங்களை தேடி வருகின்றனர் இந்த வரிசையில் பிரித்தியங்கரா கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் மாதிரியிலான கோயில்களும் அமைக்கப்பட உள்ளன.மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த கோயில்களால் வரும்காலத்தில் இப்பகுதி களைகட்ட துவஙகிவிடும். ஆன்மிக சுற்றுலாவும் இப்பகுதியில் வளர்ச்சியடையும் என பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.