துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ளது முக்கூட்டு மலை. மூன்று மலைகள் இணையும் இந்த இடத்தின் அடிவாரத்தில் கன்னி விநாயகர் கோயில் கொண்டுள்ளார். கன்னிப்பெண்களை பாதுகாப்பவராக இவர் இருக்கிறார். ஒருமுறை பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகிய சப்த கன்னியர்களுடன் வந்த சிவபெருமான் இத்தலத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தார். இந்த இடத்தின் அழகில் மயங்கிய கன்னியர் அங்கேயே தங்கியிருக்க அனுமதிக்கும்படி சிவனிடம் வேண்டினர். அவரும் பாதுகாவலராக விநாயகர், நந்தியை நியமித்து இங்கு விட்டுச் சென்றார். இதனடிப்படையில் இங்குள்ள விநாயகர் மூஞ்சூறு வாகனம் இன்றி நந்தியுடன் அருள்புரிகிறார்.