பதிவு செய்த நாள்
14
ஜன
2025
03:01
வானுார்; வானுார் அருகே வெள்ளந்தாங்கி வீரனார் கோவிலில் ஆண்கள் மட்டும் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கொள்ளிடக்கரையில் தென்பகுதியில் வசித்து வந்த முன்னோர்கள், விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த நைனார்பாளையம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் குடியேறினர். இப்பகுதியில் வசிக்கும் ஆண்கள் மட்டும், வம்சா வழியாக அப்பகுதியில் உள்ள வெள்ளந்தாங்கி வீரனார் கோவில் குளக்கரையில் ஆண்டுதோறும் போகி பண்டிகையன்று, பொங்கலிட்டு வழிபடுகின்றனர்.
நேற்று போகி பண்டிகையையொட்டி, அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆண்கள், தங்கள் குல வழக்கப்படி பொங்கலிட்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர். இரவு ஊர்வலமாக அவரவர் வீட்டிற்குச் சென்று படையலிட்டனர். இதுகுறித்து, அப்பகுதி ஆண்கள் கூறுகையில், ‘‘மூதாதையர்களின் பழக்கத்தை தலைமுறை தலைமுறையாக கடைபிடித்து வருகிறோம். பெண்களை இவ்விழாவில் அனுமதிக்காத நடைமுறை உள்ளதால், அதை மாற்ற விரும்பவில்லை. விவசாயம், கால்நடைகள் செழிக்கவும், தலைமுறை தழைத்தோங்கவும் இந்த பொங்கல் விழா நடக்கிறது’’ என்றனர்.