பதிவு செய்த நாள்
13
ஜன
2025
08:01
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலுக்கு வடக்கு பகுதியில் தெற்கு முகமாக பச்சை மரகத நடராஜர் சன்னிதி உள்ளது. இங்கு ஆண்டிற்கு ஒருமுறை ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, பச்சை மரகத நடராஜரின் திருமேனியில் கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனம் படி களையப்பட்டது.
ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் இந்த அபூர்வ நிகழ்வை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அபூர்வ பச்சை மரகத நடராஜரின் திருமேனியில் ஒலி, ஒளியால் பாதிப்புகள் ஏற்படாதவாறு ஆண்டு முழுதும் சந்தனம் பூசப்படுகிறது. கடந்த ஆண்டு, 70 கிலோ சந்தனம் திருமேனியில் பூசப்பட்டிருந்த நிலையில் சந்தனம் படி களையப்பட்டது. நேற்று காலை, 9:00 மணி முதல் தொடர்ச்சியாக மூலவர் மரகத நடராஜர், சிவகாமி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, திரவியப் பொடி, கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், சந்தனப் பொடி, தேன் உள்ளிட்ட 32 வகை அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. அபிஷேகம் நிறைவிற்கு பின், மரகத நடராஜரின் திருமேனியில் சந்தனாதி தைலம் பூசப்பட்டது. இரவு, 11:30 மணிக்கு மேல் திரையிடப்பட்டு, புதிய சந்தனத்தால் மரகத நடராஜருக்கு சந்தன காப்பு அணிவிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு, நாட்டியாஞ்சலி மண்டபத்தில் நேற்று காலை முதல், பரதநாட்டியம் நடந்தது.
சந்தனம் விலை உயர்வு; கோவிலில் உள்ள கவுன்டரில் கடந்த ஆண்டு சந்தன பாக்கெட்டுகள் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது, 250 ரூபாய்க்கு தனியாக விற்பனை செய்தனர். விலை உயர்வு குறித்து பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.