பொன்னம்பலமேட்டில் காட்சி தந்த மகர ஜோதி; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜன 2025 11:01
சபரிமலை; பொன்னம்பலமேட்டில் மகரஜோதியையும்,மகர நட்சத்திரத்தையும் தரிசித்த ஆனந்தத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஊர் திரும்பினர்.
கடந்த டிச.30. , மாலையில் தொடங்கிய மகர விளக்கு காலத்தின் நிறைவாக இன்று சபரிமலையில் மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்த பின்னர் 3:30 மணிக்கு தொடங்கப்பட்ட நெய்யபிஷேகம் காலை 7:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு 7:30 மணிக்கு உஷ பூஜை நடைபெற்றது.
இதன் பின்னர் மகர சங்கரம பூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கியது. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடந்த 8:55 மணிக்கு திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொடுத்து விடப்பட்ட நெய் தேங்காய்கள் உடைக்கப்பட்டு நேரடியாக ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைக்கு பின்னர் வழக்கமான நெய்யபிஷேகம் தொடங்கி 12:00 மணி வரை நடைபெற்றது. அதன் பின்னர் கலசாபிஷேகம், களபாபிஷேகம், உச்ச பூஜை நடைபெற்று மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார், தொடர்ந்து சபரிமலை செயல் அலுவலர் முராரி மற்றும் திருவாபரண பேடகங்களை வரவேற்கச் செல்லும் தேவசம்போர்டு அலுவலர்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு மாலை அணிவித்து வழி அனுப்பி வைத்தார். இவர்கள் சரங்குத்திக்கு செல்வதை கண்ட பக்தர்கள் அனைவரும் திருவாபரணத்தின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
6:28மணிக்கு 18-ம் படி அருகே வந்த திருவாபரண பவனியில் இரண்டு பேடகங்கள் மாளிகைபுரம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரு பேடகம் 18 படிகள் வழியாக ஸ்ரீ கோயில் முன் வந்ததும் தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோ அதை வாங்கி 6.30 மணிக்கு நடை அடைத்தனர். ஐயப்பன் விக்ரகத்தில் அணிவித்து 6.42 மணிக்கு தீபாராதனை நடத்தினர்.
இந்த நேரத்தில் பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் ஒளி விட்டு பிரகாசித்தது, தீபாராதனை முடிந்த சில வினாடி நேரங்களில் பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி காட்சி தந்தது. சரணம் ஐயப்பா என்ற கோஷத்துடன் பக்தர்கள் அதை வணங்கிய ஆனந்தத்தில் மலை இறங்கினர். ஜோதி தரிசனத்திற்காக இதுவரை இல்லாத அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டிருந்தது, பக்தர்கள் செல்லும் பாதைகள் அனைத்தும் முதலிலேயே திட்டமிடப்பட்டு அதன் வழியாக மட்டுமே அனுப்பப்பட்டனர். இதனால் நெரிசல் குறைவாக இருந்தது. சன்னிதானத்தில் மட்டும் சுமார் 1800 போலீசார் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஏ.டி.ஜி.பி. ஶ்ரீஜித் சன்னிதானத்தில் முகாமிட்டு இந்த பணிகளை கண்காணித்தார்.
ஜோதி தரிசனத்திற்கு பின்னர் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை வணங்க நீண்ட கியூ காணப்பட்டது. மத்திய அதி விரைவுப்படையினரும், கேரள போலீசாரும் இணைந்து இந்த கூட்டத்தை ஒழுங்கு படுத்தி கோயிலுக்குள் அனுப்பி வைத்தனர்.