ஏகாதசிக்கு விரதத்திற்கு வயது வரம்பு ஏகாதசி விரதத்திற்கு எல்லாரும் இருக்கவேண்டிய விரதம் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. எட்டு முதல் எண்பது வயதுக்குள் உள்ளவர்களே மேற்கொள்ள வேண்டும். இதனை, அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய: அபூர்ணாசீதி வத்ஸர:! ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ: உபயோ: அபி!! என்னும் ஸ்லோகம் குறிப்பிடுகிறது.
ஏகாதசி வளர்ந்த கதை: மார்கழி வளர்பிறை ஏகாதசியிலிருந்து பத்து நாட்கள் வேதங்களை ஜெபித்து, ஸ்ரீரங்கத்திலுள்ள நம்பெருமாளை வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில், வேதத்தோடு நம்மாழ்வாரின் பாசுரங்களையும் பாடும் நடைமுறையை திருமங்கையாழ்வார் ஏற்படுத்தினார். நாதமுனிகள், மற்ற ஆழ்வார்களின் பாடல்களையும் சேர்த்துப் பாடும் வழக்கத்தை உண்டாக்கினார். அதற்காக, ஏகாதசிக்கு 10நாட்களுக்கு முன்பே இவ்விழா தொடங்கப்பட்டது. பாட்டு பாடுவதோடு, அபிநயமாக நடித்துக் காட்டி வியாக்யானம் (பாடலுக்கான விளக்கம்) சொல்லும் முறையை பிற்காலத்தில் மணவாள மாமுனிகள் ஏற்படுத்தினார். ஆடியபடியே பாடுவதற்கு அரையர் சேவை என்று பெயர். இந்த நடைமுறையே ஸ்ரீரங்கத்தில் பின்பற்றப்படுகிறது.