பதிவு செய்த நாள்
09
ஜன
2014
04:01
ஏகாதசியன்று நாள் முழுவதும் பட்டினி இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், ஏகாதசி குறித்த ஸ்லோகம் ஏகாதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம் போஜன த்வயம் என குறிப்பிடுகிறது. இதற்கு, சகல ஜனங்களும் ஏகாதசியன்று இருமுறை சாப்பிட வேண்டும் என்று அர்த்தம் வருகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. இந்த ஸ்லோகத்தில் போஜன என்பதை போ, ஜன என இரண்டாகப் பிரித்து பொருள் காண வேண்டும். இதற்கு ஹே! ஜனங்களே! என்று அர்த்தம். இந்த ஸ்லோகத்தின் தொடர்ச்சியாக, ஏகாதசியில் செய்ய வேண்டிய செயல் பற்றிய விளக்கம் உள்ளது. அதாவது,சுத்த உபவாஸ; ப்ரதம: ஸத்கதா த்ரவணம் தத: என்பதே அது. ஆக ஹே! ஜனங்களே! ஏகாதசியன்று முழுமையாக விரதம் இருக்க வேண்டும். ஹரி கதை கேட்க வேண்டும் என்பது ஸ்லோகத்தின் முழுப்பொருள் ஆகிறது.
சைவ ஏகாதசி: விஷ்ணு நித்திரை செய்த வேளையில், அசுரன் ஒருவன் உலக மக்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். அப்போது, விஷ்ணுவின் உடம்பிலிருந்த சக்தி பெண் வடிவெடுத்து அசுரனை அழித்தது. அவளுக்கு ஏகாதசி என்று பெயரிட்ட விஷ்ணு, அவளுக்காகவே ஏகாதசிவிரதத்தை ஏற்படுத்தியதாக பத்மபுராணக்கதை கூறுகிறது. இது தவிர, தசாவதாரத்தில் கூர்மாவதாரம், அமுதகலசத்தோடு வெளிப்பட்ட தன்வந்திரி, தேவர்களுக்கு அமுதத்தைபரிமாறிய மோகினி ஆகிய அவதாரங்களும் ஏகாதசி நாளில் நிகழ்ந்தவையே. இப்படி விஷ்ணு சம்பந்தமான ஏகாதசி, சைவத்தில் சிவனுக்கும் சம்பந்தப்பட்டது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவன் அருந்திய நாள் ஏகாதசி. அதனால், அன்று யாரும் சாப்பிட கூடாது என்று சொல்வதுண்டு.
தர்மசாஸ்திரத்தில் ஏகாதசி விரதம் குறித்த ஸ்லோகம், அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய: அபூர்ணாசீதி வத்ஸர:! ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ: உபயோ: அபி!! என்கிறது. எட்டு வயது முதல் எண்பது வயது வரையுள்ள எல்லாரும் வளர்பிறை, தேய்பிறை ஏகாதசி நாளில் விரதம் இருக்கவேண்டும் என்பது இதன் பொருள். இதற்கு ஆண், பெண், சாதி, மத பாகுபாடு கிடையாது. மனிதராகப் பிறந்த அனைவருக்கும் பொருந்தும். குழந்தைகளும், பெரியவர்களும் விதிவிலக்கு என்று சொன்னாலும் கூட, முடிந்தால் அவர்களும் விரதம் இருக்கலாம். மகாராஷ்டிராவில் இந்த விரதத்தை அதிக மக்கள் கடைபிடிக்கின்றனர். -எல்லார்க்கும் உரிய விரதம்