பதிவு செய்த நாள்
10
ஜன
2014
05:01
(பத்ம புராணம், பிரம்ம வைவர்த்தபுராணம் மற்றும் சுவாமி ஸ்ரீலபிரபுபாதாவின் உரைகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது)
வைகுண்ட ஏகாதசி விரதம் கடைபிடிக்க வேண்டிய நாள்:
ஜனவரி 11 (சனி) (முந்தாய நாள் ஜனவரி 10ம் தேதி தசமி இரவிலிருந்து விரதத்தை துவக்குவது சிறப்பு)
விரதம் முடிக்க வேண்டிய நாள், நேரம்: அடுத்த நாள் ஜனவரி 12 ஞாயிறு காலை 7.30 முதல் 10.15 மணிக்குள்.
விரதங்களில் அவசியம் கடைபிடிக்க வேண்டியது ஏகாதசி விரதம். மாதம் இருமுறை வரும் ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு, இதில் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி.
ஏகாதசி விரதம் ஏன் கடைபிடிக்க வேண்டும்?
ஏகாதசி விரதம் இருப்பதை எல்லா சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன. ஏகாதசி விரதம் இருப்பதால் மற்றெல்லா விரதங்களின் பலனையும் அடையலாம். ஆனால் மற்றெல்லா விரதங்களை கடைபிடித்தாலும் ஏகாதசி விரதத்தின் பலனை அடைய இயலாது. மேலும் ஏகாதசி விரதத்தினை கடைபிடிக்காமல் தானிய உணவினை உண்பது, பாவங்கள் செய்த கர்மத்தை உண்டாக்கும். எனவே தான் ஏகாதசி அன்று குறிப்பாக தானிய உணவு வகைகள் தவிர்க்கப்படுகிறது.
ஏகாதசி என்றால் என்ன?
சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று என்று பொருள். இங்கு ஏகாதசி என்பது அமாவாசையிலிருந்து 11வது நாளையும், பவுர்ணமியிலிருந்து 11வது நாளையும் குறிக்கும். இந்த இரண்டு நாள்களிலும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
ஏகாதசி விரதம் இருப்பது எவ்வாறு?
ஏகாதசி விரதத்தின் மிக முக்கியமான அங்கம் தானியங்களால் ஆன உணவை எவ்வகையிலும் உண்ணாமல் இருப்பதேயாகும். இவ்வாறு ஏகாதசி அன்று விரதம் இருப்பதால் எல்லா பாவ விளைவுகளில் இருந்தும் விடுபடலாம் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
குறிப்பாக அரிசி, சாதம் மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்ற தானிய வகைகளால் செய்யப்பட்ட பலகாரங்களை உண்பதும் ஏகாதசி விரதத்தை முறிக்கும்.
நவதானியங்களால் செய்யப்பட்ட உணவுகளும், பருப்பு வகைகளும், பயறு வகைகளும் (கடுகு உளுந்தம் பருப்பு தாளித்துக் கொட்டுதல் உட்பட) ஏகாதசி அன்று முற்றிலும் விலக்கப்பட வேண்டும்.
காய்கறிகளில் மொச்சை, பீன்ஸ், அவரை போன்ற பயறு வகைகளைச் சேர்ந்த காய்களும் விலக்கப்பட வேண்டும்.
சமையல் எண்ணெய் வகையில் சுத்தமான பசு நெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தவிர மற்றெல்லா எண்ணெய் வகைகளும் விலக்கப்பட வேண்டும். இத்தனை கவனம் தேவைப்படுவதால் முதல் தர பக்தர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் (நிர்ஜல ஏகாதசி) ஏகாதசி விரதம் கடைபிடிப்பார்கள். அது முடியாதவர்கள் துளசி தீர்த்தம் மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பர். அதுவும் முடியாதவர்கள் பசும்பால், தயிர், பழங்கள் மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பர். அதுவும் முடியாதவர்கள் சமைத்த காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வர்.
ஆனால் எக்காரணம் கொண்டும் ஏகாதசி அன்று தானிய வகை உணவுகளை உண்ணக் கூடாது என்று பக்தி சந்தர்ப்பம் என்ற நூல் விவரிக்கிறது.
இது குறித்து சுவாமி ஸ்ரீல பிரபுபாதா அவர்கள் குறிப்பிடும் போது, பக்தர்கள் எப்போதும் பகவானின் பிரசாத உணவை மட்டுமே ஏற்க வேண்டும். பகவானுக்கு படைக்கப்படாத எந்த உணவையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஆனால் ஏகாதசி அன்று மட்டும் பகவானுக்குப் படைக்கப்பட்ட பிரசாத உணவாக இருந்தாலும், அவை தானிய உணவாக இருந்தால், அவற்றை கட்டாயம் உண்ணக் கூடாது. அந்த பிரசாதத்தை பத்திரப்படுத்தி மறுநாள் உண்ணலாம். எனவே ஏகாதசி அன்று எந்த தானிய உணவாக இருந்தாலும், அது பகவானுக்கு படைக்கப்பட்ட பிரசாதமாக இருந்தாலும் கூட உண்ணக் கூடாது என்று வலியுறுத்துகிறார்.
கிருஷ்ண பிரசாதமாக இருந்தாலும், ஏகாதசி அன்று தானிய உணவை உண்ணக் கூடாது!
பக்தர்கள் எப்போதும் பகவானின் பிரசாத உணவை மட்டுமே ஏற்க வேண்டும். பகவானுக்கு படைக்கப்படாத எந்த உணவையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஆனால் ஏகாதசி அன்று மட்டும் பகவானுக்குப் படைக்கப்பட்ட பிரசாத உணவாக இருந்தாலும், அவை தானிய உணவாக இருந்தால், அவற்றை கட்டாயம் உண்ணக் கூடாது. அந்த பிரசாதத்தை பத்திரப்படுத்தி மறுநாள் உண்ணலாம். எனவே ஏகாதசி அன்று எந்த தானிய உணவாக இருந்தாலும், அது பகவானுக்கு படைக்கப்பட்ட பிரசாதமாக இருந்தாலும் கூட உண்ணக்கூடாது. - ஸ்ரீலபிரபுபாதா- (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 15.9 பொருளுரையிலிருந்து...)
ஏகாதசி விரதம் ஆரம்பிப்பதும், முடிப்பதும் எவ்வாறு?
ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று கடைசி உணவை சூரிய அஸ்த மனத்திற்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம். அதே போல் ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டிகளில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீர் கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தம் உட்கொண்டும், மற்றவர்கள் பகவான் கிருஷ்ணருக்கு நைவேத்தியமாக செய்யப்பட்ட தானிய உணவை உட்கொள்வதுமாகும்.
ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது எந்த அளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அடுத்த நாள் துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்தில் விரதத்தை முடிப்பதாகும். ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி நாள் குறித்தும், விரதம் முடிக்க வேண்டிய நேரம் குறித்த காலண்டர் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில்களில் கிடைக்கும்.
ஏகாதசி அன்று செய்ய வேண்டியது என்ன?
ஏகாதசி முழுவதும் பகவானின் நாமம் சொல்வது, அதிலும் குறிப்பாக கலியுக தாரக மந்திரமான ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே எனும் 16 வார்த்தைகள் அடங்கிய ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை குறைந்தபட்சம் 108 முறை உச்சரிப்பது சிறந்தது.
108 மணி ஜப மாலை
108 முறை உச்சரிப்பதற்கு துளசி அல்லது வேம்பினால் செய்யப்பட்ட 108 மணி ஜபமாலையை பயன்படுத்துவது மிகவும் நல்லது. துளசிமணி ஜப மாலையை பயன்படுத்த சிறிது கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் வேம்பினால் செய்யயப்பட்ட ஜபமாலையை எல்லோரும் பயன்படுத்தலாம். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பயன்படுத்தலாம். எனவே ஏகாதசி அன்று ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை 108 மணி ஜப மாலையில் அதிகாலை முதல் தொடங்கி, முடிந்தளவு அதிகபட்சம் எத்தனை முறை சொன்னாலும் மிக மிக நல்லது. இப்படி தொடர்ந்து பகவான் நாமத்தை சொல்வதால் விரதம் இருப்பதற்கான தெளிவான மனநிலையும், மனதில் தெய்வ சிந்தனையும் நிலைத்து இருக்கும்.
இதுகுறித்து சுவாமி ஸ்ரீலபிரபுபாதா கூறுகையில், ஏகாதசி என்றால் வெறும் விரதம் இருப்பது மட்டுமல்ல, அத்துடன் சேர்த்து கிருஷ்ணரின் மீதான அன்பையும், நம்பிக்கையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பதன் உண்மையான நோக்கம் என்னவென்றால், உடலிற்கான தேவைகளை குறைத்துக் கொண்டு, கிருஷ்ணரின் நாமங்களை உச்சரித்து பக்தி சேவையில் ஈடுபடுவதே ஆகும் என்று குறிப்பிடுகிறார்.
108 மணி ஜபமாலையும், அதில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கு விளக்கப் புத்தகமும் எல்லா நகரங்களிலும் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில்களில் கிடைக்கிறது. இஸ்கான் கோயில்களில் கிடைக்கும் இந்த ஜபமாலை கிருஷ்ணர் பிறந்த புண்ணிய பூமியான மதுராவிலிருந்து தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏகாதசி அன்று கோயிலுக்கு செல்லுதல்: ஏகாதசி அன்று அவசியம் கோயிலுக்குச் சென்று கிருஷ்ணரை தரிசிக்க வேண்டும். ஸ்ரீமத்பாகவதம், பகவத் கீதை நூல்களை படிப்பதும், கேட்பதும் மிகவும் நல்லது.
ஏகாதசி அன்று செய்யக் கூடாதது என்ன?
ஏகாதசி அன்று சினிமா செல்வதோ, பரமபதம் ஆடுவதோ, வீண் பேச்சுக்களில் காலத்தை விரயம் செய்வதோ அல்லது வீணாகப்படுத்துத் தூங்குவதோ விரதத்திற்கு சற்றும் உதவாது. தவிர திருமணம் போன்ற உலக காரியங்களை ஏகாதசி அன்று தவிர்ப்பது நல்லது.
பாவங்களை நீக்கும்: முறைப்படி இருக்கும் ஏகாதசி விரதம் ஒருவரை பாவங்களிலிருந்து விடுவிப்பதுடன் விரதம் இருப்பவர்களின் மூதாதையர்கள் கூட நற்கதி அடையச் செய்யும்.
ஏகாதசியும், கீதையும்: ஏகாதசி அன்று பகவத்கீதையை பாராயணம் செய்வது, கீதை உரையை கேட்பது இவை மிகவும் சிறந்தது. தவிர பகவான் கிருஷ்ணருக்கு நெய் தீப ஆரத்தி காட்டுவதும், ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜபம் செய்வதும் நல்லது.
- இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை.
யார் ஒருவர், ஏகாதசி விரதத்தை கடைபிடிக்கின்றாரோ அவர் எல்லா பாவ விளைவுகளில் இருந்தும் விடுபடுவார். - பிரம்ம வைவர்த்த புராணம்
சத்திய யுகத்தில் விஷ்ணுவை தியானிப்பதாலும், திரேதா யுகத்தில் யாகங்கள் செய்வதாலும், துவாபர யுகத்தில் கோயில் வழிபாடு செய்வதாலும் பெறக்கூடிய அனைத்து பலன்களையும் கலியுகத்தில் ஹரி நாமத்தை உச்சரிப்பதாலேயே பெற முடியும் - ஸ்ரீமத் பாகவதம் 12.3.52
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
என்ற பதினாறு வார்த்தைகளைக் கொண்ட ஹரே கிருஷ்ண மஹாமந்திரம், கலியின் கேடுகளை எதிர்த்து அழிக்கும் சக்தி வாய்ந்தது.
-கலிசந்தரண உபநிஷத்