ஸ்ரீவில்லிபுத்தூரில் திரு அவதாரம் செய்து விஷ்ணு சித்தரால் வளர்க்கப்பட்டு தெய்வீக பாமாலை புனைந்து திருமால் திருவடியை சேர்ந்தவள் ஆண்டாள் நாச்சியார். அவள் திருவாய் மலர்ந்தருளிய தமிழ் பாக்கள் யாவும் தெய்வீகத் தன்மை வாய்ந்தவை. அதை ஓதி அவ்வழி நடப்பவர்களுக்கு பெரு நிலை எய்துவதற்கு வழிகாட்டுபவை. ஆண்டாள் கூறும் அப்பெருநெறிதான் என்ன? அனைத்து ஞானிகளும் கூறும் ஆண்டவன் அடி சேர்தல் என்ற நெறிதான் அது. இறைவனை சேர்வதற்கு மனம், வாக்கு, உடல் தூய்மை வேண்டும். வாயார பாடி மனதினால் இறைவனை சிந்திக்க வேண்டும். உடலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஆண்டவன் திருப்பணி செய்து பின்தான் ஆடை அணிகலன் எல்லாம் என இறைவனை முன்னிறுத்தி நம்முடைய சுகங்களை பின் தள்ளி வாழ வேண்டும் என ஆண்டாள் நாச்சியார் கூறுகிறார்.