குருவாயூர் கோயிலில் குந்துமணி வைத்து பிரார்த்தனை செய்வது ஏன் தெரியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2017 03:11
குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குந்துமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும் குழந்தை வரம் வேண்டியும் மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்கள் மீண்டும் அதிலேயே போட்டு விடுகிறார்கள். குருவாயூர் கோயிலில் இந்த விசேஷமான பிரார்த்தனையின் பின்னணியில் ஒரு சுவையான கதை உண்டு. முன்னொரு காலத்தில் ஒரு வயதான ஏழைப் பெண்மணிக்கு குருவாயூரப்பன் இஷ்ட தெய்வம், அவர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் வசித்து வந்தார். பண வசதி இல்லை. ஆனால், ஏதாவது காணிக்கை கொடுத்து பாலகிருஷ்ணனைத் தரிசிக்க விரும்பினார். அவர் வீட்டில் இருந்த மஞ்சாடி (குந்துமணி) மரத்திலிருந்து உதிரும் குந்துமணிகளைச் சேகரித்துச் சுத்தம் செய்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தார்.
ஒருநாள் ஆவல் மிகுதியில் கண்ணனைக் காண நடந்தே செல்லத் தீர்மானித்து. பயணம் மேற்கொண்டார். ஒரு மண்டலம் பயணம் செய்து அவர் குருவாயூரை அடைந்தபோது, கோயிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒவ்வொரு மாதமும் முதல் நாள் அன்று அந்த ஊர் அரசன் தன் பக்தியின் வெளிப்பாடாக கோயிலுக்கு ஒரு யானையைச் சமர்ப்பிப்பது வழக்கம். அதனால்தான் அந்த பரபரப்பு. சேவகர்கள் அரசன் வருகையால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர். சேவர்களின் அஜாக்கிரதையால் அந்தப் பெண்மணி கீழே தள்ளப்பட்டார். பை கீழே விழுந்து குந்து மணிகள் சிதறின. அதேசமயம் கோயிலுக்குச் சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓடியது. கோயில் பொருட்களை நாசம் செய்தது. பதற்றத்துடன் குருவாயூரப்பனிடமே பிரஸ்னம் கேட்டனர். அப்போது கர்ப்பக்ருஹ்த்திலிருந்து, “நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்து குந்துமணிகள் எனக்கு வேண்டும்” என்று அசரீரி கேட்டது. கீழே சிதறிக் கிடந்த குந்துமணிகளை அனைவரும் பொறுக்கி எடுத்து அந்தப் பெண்மணியிடம் கொடுத்து மன்னிப்புக் கேட்டனர். அவரை சகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவர் ஆசையுடன் அதை அப்பனிடம் சமர்ப்பித்ததும் யானையின் மதம் அடங்கியது. அவருடைய நினைவாகவே இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குந்துமணிகள் வைக்கப்பட்டுள்ளது.