பதிவு செய்த நாள்
27
பிப்
2012
04:02
மாசிமகம் என்றதும் நினைவுக்கு வரும் கும்பகோணத்தில் புனிதமான மகாமகக்குளம் உள்ளது. குளத்தைச் சுற்றி 16 மண்டபங்கள் உள்ளன. அதில் பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தாளேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திஹேஸ்வரர், பைரவேஸ்வரர், அகத்தீஸ்வரர், வியாசேஸ்வரர், உமைபாகேஸ்வரர், நைருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதரேஸ்வரர், முக்த தீர்த்தேஸ்வரர், ÷க்ஷத்ரபாலேஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிவன் கோயில்களுக்கு தலைமையாக கும்பேஸ்வரர் கோயில் உள்ளது. 15 ஏக்கர் பரப்புள்ள இக்குளத்தை வெட்டியவர் அச்சுதப்ப நாயக்க மன்னரின் அமைச்சர் கோவிந்த தீட்சிதர். இந்நகரில் ஏழு குளங்கள், மூன்று கிணறுகள், நான்கு காவிரித் தீர்த்தங்கள் உட்பட 14 தீர்த்தங்கள் உள்ளன.
பிற இடங்களில் வாழ்வோர் தங்கள் பாவம் தீர காசியில், கங்கையில் நீராடுவார்கள். காசியில் இருப்போர் செய்த பாவம் தீர வேண்டுமானால் குடந்தை மாமாங்கக் குளத்தில் நீராடுவராம். மகாமககுளத்தில் 66 கோடி தீர்த்தங்கள் கலந்துள்ளன. 9 நதிகளும் மாசியில் வந்து கூடும் இக்குளத்திற்குள் 16 ஊற்றுக் கிணறுகள் உள்ளன. இக்குளத்தில் அமிர்த்தம் கலந்துள்ளதால் எப்போது நீராடினாலும் புண்ணியம். அதிலும் மகாமகத்தன்று நீராட ஏராளமான புண்ணிய பலன் கிடைக்கும். இக்குளத்தில் ஒருமுறை வலம் வந்தால் பூமியை 100 முறை வலம் வந்த பலன் கிட்டும். இக்குளத்தை வணங்கினால் சிவபிரானோடு சேர்த்து எல்லா தேவர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். இக்குள நீரை சிறிதளவு உட்கொண்டாலே சகலவித பாபங்களும் தீரும். இங்கு நீராட வேண்டுமென மனதால் நினைத்தாலேகூட புண்ணியம்தான். தொடர்ந்து ஐந்து வருடங்கள் மாசிமகத்தன்று மகாமகக் குளத்தில் மூழ்கி எழுவதால் புத்திரபாக்யம் கிட்டும். மகாமகத்தன்று நீராடினால் வாரிசுகளின் ஆயுள் அதிகரிக்கும். மாசிமக நாளில், இங்கு அமைந்த 17 சிவாலயத்தையும், 5 விஷ்ணு ஆலயத்தையும் அத்துடன் மாமாங்கக் குளக்கரையில் பக்கத்துக்கு நான்கு வீதம் அமைந்த பதினாறு சின்ன சிவ சன்னதிகளையும் தரிசிப்பது நல்லது. மாசி மகத்தன்று இத்தனை சுவாமிகளும் இக்குளத்தில் தீர்த்தவாரி காண்பர். அவற்றுள் ஒரு ஆலயமான ஏகாம்பரேஸ்வரர் ஆலய இறைவன் ஏகாம்பரநாதருக்கு பதில் காமாட்சியம்மை தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார். அப்பனும் அம்மையும் ஒன்றே என்பதே இதனால் அறியலாம்.