பதிவு செய்த நாள்
27
பிப்
2012
04:02
குந்திதேவிக்கு, சூரியன் மூலமாக கர்ணன் அவதரித்தான். திருமணமாவதற்கு முன் கர்ணனைப் பெற்ற குந்திதேவி, குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். அந்தப் பாவம் அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. ஒரு நாள் ஒரு முனிவரைச் சந்தித்த குந்தி, கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் நீங்க பரிகாரம் கேட்டாள். அதற்கு முனிவர், மாசி மகம் அன்று ஏழு கடலில் நீராடினால் பாவம் விலகும் என்றார். ஒரே நாளில் எப்படி ஏழு கடல்களில் நீராட முடியும்? என்று இறைவனை வேண்டினாள் குந்தி. அப்போது, திருநல்லூர் கோயில் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதில் உனக்காக ஏழு கடல் தீர்த்தங்களை வரவழைக்கின்றேன். அந்தத் தீர்த்தத்தை ஏழு கடலாக நினைத்து மாசி மகம் அன்று நீராடு! என்று அசரீரி கேட்டது. குந்தியும் அப்படியே செய்து விமோசனம் பெற்றாள். அந்தத் தீர்த்தமே சப்த சாகர தீர்த்தம் ஆகும். இத்திருத்தலம், தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் திருநல்லூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் ஆகும்.
குளத்தில் நீராடும் ஆறு: காவிரிநதி ஏழு கட்டங்களாக பாய்ந்து வளம் பெருக்குகிறது. தலைக்காவிரி, அகன்றகாவிரி, பஞ்சநதம், கும்பகோணம், மத்தியார்ச்சுனம், மயிலாடுதுறை, காவிரிப்பூம்பட்டினம் ஆகியன அவை. இவற்றில் நடுநாயகமாகத் திகழும் தலம் கும்பகோணம். ஒரு சமயம், வெள்ளத்தால் உலகம் அழிய இருந்த வேளையில், மீண்டும் உயிர்களை படைப்பதற்கான பீஜம் தாங்கிய அமுத கும்பத்தை பிரம்மா நீரில் மிதக்க விட்டார். அது வெள்ளத்தில் மிதந்து ஒதுங்கிய இடமே கும்பகோணம். இந்த கும்பத்தை வேடனாக வந்த சிவபெருமான், திருவிடைமருதூரில் தங்கினார். பாணம் ஒன்றை எடுத்து குடத்தைக் குறிவைத்தார். பாணம் எய்த இடம் பாணாத்துறை ஆயிற்று. இவ்வூர் கும்பகோணத்துக்கு வடகிழக்கே உள்ளது. குடம் உடைந்து ஐந்து இடங்களில் சிதறியது. வடமேற்கே சுவாமிமலையிலும், தென்மேற்கே தாராசுரத்திலும், தென்கிழக்கே திருநாகேஸ்வரத்திலும், கிழக்கே திருவிடைமருதூரிலும், வடகிழக்கே கருப்பூரிலும் அமுதம் சிதறி விழுந்தது. இத்தலங்களை பஞ்சகுரோசத் தலங்கள் என்று குறிப்பிடுவர். குரோசம் என்றால் கூப்பிடு தூரம். அருகருகே இந்த தலங்கள் உள்ளதால், இப்பெயர் பெற்றன. மாசிமகத்தன்று கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் பிரதான வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது. இங்குள்ள தீர்த்தம் மகாமகத் தீர்த்தம். காசியில் ஓடும் புனித கங்கையும் தன் பாவம் தீர நீராடும் குளம் இது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமை பெற்ற தலம்.
மாசிமகத்தில் தீர்த்தவாரி: காசிக்குச் சமமாகப் போற்றப்படும் தலம் ஸ்ரீவாஞ்சியம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தலத்தில் மாசிமகவிழா சிறப்பாக நடக்கும். திருமால் சிவனை வேண்டி லட்சுமியை மீண்டும் அடைந்த தலம். காசியில் ஓடும் கங்கை, தன்னிடம் சேரும் பாவங்களை வாஞ்சிநாதரை வழிபட்டு போக்கிக் கொள்வதாக ஐதீகம். காலதேவனான எமன், உயிர்களிடம் இரக்கம் இல்லாமல் நடந்ததால் பெரும் பாவம் உண்டானது. அதனைப் போக்க, சிவனை இத்தலத்தில் வழிபட்டான். சிவன், எமனைத் தன் வாகனமாக்கிக் கொண்டதோடு இங்கு வழிபட்டவருக்கு எமபயம் நீங்கும் என்ற வரத்தையும் அருளினார். ஸ்ரீவாஞ்சியத்தில் எமனுக்கு சந்நிதி உள்ளது. எமனுக்கு சிவன் காட்சிதரும் விழா மாசிமகத்தன்று நடக்கும். அன்று எம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடக்கும்.
வசதியிருந்தால் தங்கம் தானம் செய்யலாம்: கும்பகோணம் மகாமகக்குளத்தின் கிழக்கு, மேற்கு கரைகள் நீள்சதுரமாகவும், வடக்கு,தெற்கு கரைகள் சற்று உள் வளைந்தும் இருக்கும். உயரத்தில் இருந்து பார்த்தால் குடம் போல காட்சியளிக்கும். அமுதகுடத்தை நினைவூட்டும் விதத்தில் இந்த அமைப்பு காணப்படுகிறது. மாசிமகத்தன்று, இங்கு புனித நீராடுவதுடன், தானமும் அளிக்க வேண்டும். அச்சுதப்ப நாயக்கரின் மந்திரியான கோவிந்த தீட்சிதர், தன் எடைக்கு எடை தங்கத்தை அந்தணர்களுக்கு வழங்கிய சரித்திரம் உண்டு. குளக்கரையில் உள்ள பிரம்ம தீர்த்தேஸ்வரர் துலாபார மண்டபத்தில் தீட்சிதர் தானம் அளித்த சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பொன்னிறமுடைய குரு, பொன்நிறக் கதிர்களை வீசும் சூரியன் ஆகிய இருகிரகங்களிடம் இருந்தும் காந்த ஆற்றலைப் பெற, பொன் தானம் செய்யும் வழக்கம் இருக்கிறது. வசதி இருப்பவர்கள் செய்யலாமே!
சிம்மராசியும் மகமும்: ஒவ்வொரு ஆண்டும் வருவது மாசிமகம். இந்த நாளில் கும்பராசியில் இருக்கும் சூரியனும் சிம்மத்தில் இருக்கும் சந்திரனும் ஒருவருக்கொருவர் பலமுடன் பார்த்துக் கொள்வர். இத்துடன் சிம்மராசியில் குருவும் சந்திரனுடன் சேர்ந்திருக்கும் மாசிமகமே மகாமகம். நவகிரகங்களில் குரு, ராசிமண்டலத்தை ஒருமுறை சுற்றி வர 12 ஆண்டுகளாகும். அவர் சிம்மராசியில் இருக்கும் போது மகாமகம் கொண்டாடப்படும். கடந்த 2004ல் ஏற்கனவே மகாமகம் கொண்டாடப்பட்டது. 2016ல் மீண்டும் இந்த விழா வருகிறது.
துலாபாரம் கொடுத்த தீட்சிதர்: கும்பகோணம் மகாமகக்குளக்கரையில் 16 படித்துறைகள் உள்ளன. இத்துறைகளில் அனைத்திலும் சிவன் சந்நிதிகள் உள்ளன. இவற்றைக் கட்டியவர் கோவிந்த தீட்சிதர். இவர் நாயக்க மன்னர்களின் அவையில் இருந்தவர். ஒரு மகாமக நாளில் இக்குளத்தின் வடமேற்கு மூலையில், தன் எடைக்கு எடையாக தங்கத்தை கும்பேஸ்வரருக்குக் கொடுத்தார். இப்படிக் கொடுப்பதற்கு, ஹிரண்ய கர்ப்பம் என்று பெயர்.
குடத்தின் வடிவில் குளம்: கும்பகோணம் மகாமகக்குளம் கிழக்கு மேற்காக நீள் சதுரமாகவும், வடகரையும் தென்கரையும் சிறிது உள்வளைந்தும், கிழக்கில் குறுகியும், மேற்கில் அகன்றும் உள்ளது. இதை மேலிருந்து பார்த்தால் குடம்போல காட்சியளிக்கும். இக்குளத்தில் புனித நீராடினால் அமுதக் குடத்திற்குள்ளேயே நீராடியது போலாகும். பொதுவாக ஒருவரின் பாவம் புண்ணியதீர்த்தம் எதில் நீராடினாலும் நீங்கும் என்பது சாஸ்திரவிதி. புண்ணியத் தலங்களில் பிறந்தவர்கள் செய்த பாவம் கங்கையில் நீராடினால் நீங்கும். ஆனால், காசியில் பிறந்தோர் கும்பகோணத்தில் நீராடினால் தான் பாவம் விலகும். கும்பகோணத்தில் பிறந்தவர்கள் எங்கும் செல்லத் தேவையில்லை. மகாமகக்குளத்தில் நீராடினாலேயே விலகிவிடும். இதனை கும்பகோணேக்ருதம் பாவம் கும்பகோணே விநச்யதி என்பர்.
மாசிமகத்தில் விளக்கு ஏற்றுங்க: ஸ்ரீரங்கத்திற்கு எவ்வளவு சிறப்புண்டோ அத்தனையும் கொண்ட சிறப்பான திவ்யதேசம் திருக்கோஷ்டியூர். மந்திர உபதேசம் வேண்டி ராமானுஜர், திருக்கோஷ்ட்டியூர் நம்பியை 18 முறை தேடி வந்தது இங்கு தான். உலகமக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்ததால் (ஓம் என்பது ஓரெழுத்து) திருமந்திரம் விளைந்த திவ்யதேசம் என்ற பெருமை இதற்குண்டு. பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு சவுமியநாராயணர் என்பது திருநாமம். பொதுவாக கோயில்களில் உற்ஸவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம்.இப்பெருமானை திருமங்கையாழ்வார் வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் என்று போற்றுகிறார். இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் ஆகிய பெயர்களுண்டு. மகாமகக்கிணறு என்னும் சிம்மக்கிணறு இங்குள்ளது. இதில் மாசிமகத்தில் நீராடுவது சிறப்பு. மாசிமகத்தன்று இங்கு தெப்பத்திருவிழா நடைபெறும். சவுமியநாராயணரிடம் ஏதாவது வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவர்கள், தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும். அந்த விளக்கை புத்திரபாக்கியம், திருமணம் போன்ற கோரிக்கைகளை வைப்பவர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறியதும், அடுத்த மாசிமகத்தன்று மீண்டும் அந்த விளக்குடன் மேலும் 3 அல்லது 5 அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது மரபாகும்.
மாசி மாதத்தை மாதங்களின் சிகரம் என்றும் கும்பமாதம் எனவும் கூறுவார்கள். மாசி மாதத்தில் மகநட்சத்திரத்துடன் பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே மாசி மகம். மக நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்த நாள். நீர் நிலை உள்ள இடங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.