ஒவ்வொரு முறையும் பக்தர்களை காக்க மகாவிஷ்ணு ஏதாவது ஒரு அவதாரம் எடுப்பது வழக்கம். ஆனால் தாயின் கருவில் பிறந்து, வளர தாமதமாகும் என்று தூணை பிளந்தபடி நரசிம்மராக தோன்றி சிறுவன் பிரகலாதனை காத்தார். “எங்கேயடா உன் ஹரி?” என்று பிரகலாதனின் தந்தை இரண்யாசுரன் கேட்ட போது,’எங்கும் நிறைந்த விஷ்ணு தூணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்’ என தூணைக் காட்டினான் பிரகலாதன். அதைப் பிளக்க முயன்றான் இரண்யன். சிங்க முகமும், மனித உடம்பும் கொண்டவராக கர்ஜித்தபடி, தூணைப் பிளந்தபடி வெளி வந்தார் நரசிம்மர். கூரிய நகங்களால் அசுரனின் வயிற்றைக் கிழித்து, குடலை மாலையாக்கி கொண்டு ஆவேசித்தார். மகாலட்சுமி ஓடி வந்து நரசிம்மரை அமைதிப்படுத்தினாள். அவளைத் தன் மடியில் தாங்கியபடி லட்சுமிநரசிம்மராக காட்சியளித்தார். நரசிம்மருக்குரிய சுவாதி நட்சத்திரத்தன்று மாலை 4:30 – 6:00 மணிக்குள் பானகம், தயிர்சாதம் படைத்து வழிபட்டால் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும். இதனை’நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை’ என்பார்கள்.