பதிவு செய்த நாள்
07
மே
2019
04:05
ராமாவதாரத்தின் முடிவில், தன்னுடன் இருப்பவர்களை வைகுண்டத்திற்கு அழைத்தார் ராமபிரான், எல்லோரும் ராமபிரானுடன் புறப்பட்டார்கள். ஆனால், ஆஞ்சனேயர் மட்டும் ராம பிரானுடன் வைகுண்டம் செல்ல மறுத்து விட்டாராம். சதாசர்வ காலமும் ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க, இந்தப் பூவுலகம்தான் தகுந்த இடம். யாரெல்லாம் ராமா...ராமா...! என்று ஜபிக்கிறார்களோ, அவர்களது துன்பங்களையும், பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யப் போகிறேன் என்று ராமபிரானிடம் கூறிய ஆஞ்சனேயர், ராமநாமம் ஜபிப்பவர்களை எந்தத் தீயசக்திகளும் நெருங்கவிடாமல் காப்பாற்றப் போகிறேன் என்றும் கூறினாராம்.
ராமரும், அனுமனின் பக்தியைப் போற்றி, நீ சிரஞ்சிவியாக, மரணமற்றவனாக என்றென்றும் என் பெயரை ஜபித்துக் கொண்டே, இங்கே நீடூழி வாழ்க! என்று அருளாசி கூறி விட்டு, ராம பிரான் வைகுண்டம் சென்று விட்டார். ராமபிரான், வைகுண்டம் சென்று விட்டாலும், எங்கே ராமபிரான், மறுபடியும் திரும்பி வந்து, வைகுண்டம் வரச் சொல்லி அழைப்பாரோ, அப்பொழுது தான் மனம் மாறி, வைகுண்டம் சென்று விடுவோமோ என்ற அச்சத்தில், தன் கால்களை சங்கிலியால் பிணைத்துக் கொண்டு, இத்தலத்திலேயே ஆஞ்சனேயர் தங்கி விட்டாராம். இவரை வழிபடும்போது ராமா, ராமா என்று ஜபித்துக் கொண்டே வழிபட்டால், நம்முடைய மனக்கவலைகள் நீங்கும். எல்லாக் காரியங்களிலும் வெற்றிகிட்டும், சனிதோஷங்களால் ஏற்படும் சங்கடங்கள் எல்லாம் விலகும்.