Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: குழந்தை வேலாயுத சுவாமி
  உற்சவர்: குழந்தை வேலாயுத சுவாமி
  அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை
  தல விருட்சம்: வில்வம்
  தீர்த்தம்: ஆறுமுகசுனை
  ஆகமம்/பூஜை : குமார தந்தரம் ஆகமம்
  புராண பெயர்: குரு இருந்த மலை
  ஊர்: மருதூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தைபூசம் 11 நாள் பிரம்மோற்சவம் திருத்தேர் பங்குனி உத்ரம் தேர்திருவிழா, கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், மாதாந்த்ர கிருத்திகை அமாவாசை சஷ்டி போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன. தைப்பூசத் தேர்விழாவின் போது திருக்கல்யாண உற்சவம் இந்த வள்ளி அம்மைக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதக் கிருத்திகையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமையன்று திருமுருக பக்தர்களாலும், ஆகஸ்டு 15 ஆம் நாள் திரு கங்காதர செட்டியார் பரம்பரையினராலும் திருப்படித் திருவிழா நடைபெறுகின்றன. தைப்பூசம் அன்று தேர்த்திருவிழாவும், பங்குனி உத்தரத்தன்று பால்குட விழாவும் குறிப்பிடத்தக்க திருவிழாக்களாகும். மார்ச் 21, 22, 23 தேதிகளில் சூரிய வழிபாடும் நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  மார்ச் மாதத்தில் 22ம் தேதியில் அஸ்தமான சமயத்தில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் பாதம் முதல் மார்பு வரை படர்வது சிறப்புமிக்கதாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில், மருதூர் போஸ்ட், குருந்தமலை, கோயம்புத்தூர்-641 104.  
   
போன்:
   
  +91 4254-274747, 99654 96618 
    
 பொது தகவல்:
     
  மேற்கு நோக்கிய மூலஸ்தானம், வடக்கு நோக்கிய இராஜகோபுரம், வைணவ திவ்ய தேசங்களை ஞாபகபடுத்தும் விதமாக கீழிருந்து 108 படிகளை கொண்டது. குருந்தமலையைச் சுற்றிலும் பசுமையான வயல்களும் தென்னந்தோப்புகளும் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிக்கின்றன. மலை அடிவாரத்தில் கோயிலுக்கு எதிரில் மலைச்சரிவில் கஜபுஷ்கரணி என்றும் அனுமந்தசுனை என்றும் அழைக்கப்படும் இரண்டு நீர்நிலைகள் உள்ளன. ஒன்றில் உள்ள நீரைக் குடிப்பதற்கும் மற்றொன்றை குளிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். அனுமந்த சுனையின் எதிரிலுள்ளது ஆஞ்சநேயர் கோயில். கோயில் வாயிற்புறம் பாறையில் அனுமனின் பாதம் பதிந்துள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேய மூர்த்தி மூன்றடி உயரம் இருப்பார். ஓங்கிய வலக்கை இடது கையில் தாமரை மொட்டு, கையில் கடகமும், விரலில் மோதிரமும் காணலாம். இடையில் சதங்கையுடனும் வாலில் மணியுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.

கிழக்கு பார்த்த அமைப்பில் பஞ்சாட்சர கணபதி, பஞ்சலிங்கங்கள், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக கல்யாண சுப்ரமண்யரும் தனித்தனி சன்னிதிகளில் காட்சியளிக்கிறார்கள். கீழ்ப்புறம் ஒரு கரும்பாறையில் ஐந்து தலை நாக சன்னதியும் அதனை அடுத்து மயில்களையும் உள்ளது. 108 படிகளைக் கடந்து மலைக்கோயிலுக்கு வந்தப் பிறகு கிழக்குப்பிராகாரத்தில் மேற்குநோக்கி ஆதி மூலவர் சன்னிதியுள்ளது. இங்கு அகத்தீச்வரர், ஆனந்த வல்லி அருட்காட்சி அளிக்கிறார்கள். இதன் கிழக்குப் பகுதியில் ஆறுமுகச்சுனை இயற்கையாகவே பாறைகளில் அமைந்துள்ளது. கோயிலை வலம்வந்து அழகிய கலைவேலைப்பாடுகளுடன் கூடிய தீபஸ்தம்பம், அதன் அருகில் கொடி மரம் உள்ளது. கீழ்ப்புறம் மயில்மண்டபம் தாண்டி அர்த்த மண்டபம் அமைந்துள்ளது. குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோயில் மலை அடிவாரத்தில் ஐந்து நிலைகள் கொண்ட எழிலார்ந்த ராஜ கோபுரம் அமைந்துள்ளது.

பீளமேடு பி.எஸ்.ஜி. மங்குத் தாயம்மாள் அவர்களது திருப்பணியால் உருவான இக்கோபுரத்தைத் தாண்டியதும் வலப்பக்கம் கம்பீர விநாயகர் ஐந்தடி உயரத்தில் அற்புதக் காட்சியளிக்கிறார். வலக்கரம் ஒன்றில் தந்தம் கொண்டும், பின்கரங்களில் பாசம், அங்குசம் ஏந்தியும் உள்ளார். மலைப்படி ஏறினால் வழியில் இருபுறமும் வேல்கள் நடப்பட்டுள்ளது. ஓர் அரிய காட்சியாகும்.  வழியில் சப்தமாதர்கள் என்னும் கன்னிமார் சன்னிதியுள்ளது. கடம்பன், இடும்பன், வீரபாகு ஆகியோர் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்கள். அவர்களை தரிசித்து மேலே சிறிது தூரம் சென்றால் வலப்புறம் காசி விசுவநாதர், விசாலாட்சி அம்மை ஆகியோர் மற்றும் சூரியன் சன்னிதியையும் தரிசிக்கலாம்.

அண்மைக்காலத்தில் குருந்தமலைக்குமரன் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். சிக்கம்பாளையத்தில் இருந்த திரு.சி. நஞ்சப்பா என்பவர் 1943 ஆம் ஆண்டில் 52 நாட்கள் இக்கோயிலில் தங்கி தவம் செய்தார். ஒருநாள் முருகன் தவத்திரு முருகானந்த சுவாமிகள் (வெள்ளைக் கிணறு முருகானந்த நிலையம் சாமி) உருவில் தோன்றி மங்கள அட்சதை போட்டு பிரணவ உபதேசம் செய்தாராம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21,22,23 தேதிகளில் சூரிய ஒளி குருந்தமலை முருகன் திருமேனியில் பாதத்திலிருந்து தொடங்கி வருவதைக் கண்டு அவர் இதனை அடியார்களுக்கு அறிவித்தாராம். அன்று தொடங்கி ஆண்டுதோறும் இவ்வழிபாடு மக்களிடையே பிரபலமாகி வருகிறது. திரு டி ரங்கையா கவுடர் அறங்காவலராக இருந்த காலத்தில் 1941 ஆம் ஆண்டில் கல்யாண மண்டபத் திருப்பணி நிறைவேறியது. 1946 ஆம் ஆண்டு பீளமேடு பி.எஸ்.ஜி. கங்காநாயுடு அவர்களை குருந்த மலைமுருகன் ஆட்கொண்டு ராஜகோபுரத்திருப்பணி செய்வித்தான். பஞ்சாட்சரகணபதி கோயில், பஞ்சலிங்கேச்வரர் கோயில் ஆகிய திருப்பணிகளை மேட்டுப்பாளையம் குமாரசாமி ஆசாரி செய்துள்ளார்.

பில்லூர் அணைக்கட்டில் ஒப்பந்தக்காராகப் பணியாற்றிய இப்ராகிம் காசிப் என்பவருக்கு குருந்தமலை முருகன் அருளால் புத்ரபாக்யம் கிடைக்க அவர் ஆறுமுக சுவாமி கோயிலில் வடக்கும் கிழக்கும் உள்ள செங்கல் திருமதிலைக்கட்டி முடித்தார். ஆஞ்சநேயர் கோயில் திருப்பணி குன்னூர் தாசில்தார் ஸ்ரீகண்ட ஐயர் என்பவரால் செய்யப்பெற்றது. புங்கம்பாளையம் திரு குன்னப்ப கவுண்டர் அவர்கள் விநாயகர் கோயிலையும், தையூர் திரு. சுப்பையா கவுண்டர் தேர் மேடையையும், காரமடை, திரு உத்தண்டி செட்டியார் அலுவலக்கட்டிடத்தையும் காரமடை திரு. ஆ.ரங்கசாமி முதலியார் வாகனமண்டபத்தையும், குன்னூர், திருவேங்கட செட்டியார் மற்றும் திரு. குழந்தைவேல் செட்டியார் ஆகியோர் திருக்கல்யாணமண்டப தென்புற பகுதியையும், திரு. ந.செல்வராஜ் அவர்கள் முயற்சியால் இடும்பன் கோயில் முன்மண்டபமும்,திருமதி சந்திரகாந்த் கோவிந்த ராஜுலு அவர்களால் வசந்த மண்டப திருப்பணியும் நடைபெற்றுள்ளன. தற்போது சுகுணா மோட்டார்ஸ் திரு. லக்ஷ்மிநாராயணன் அவர்கள் முயற்சியால் சில திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் வசித்து வரும் திரு. ஆர். பாலசுப்ரமண்யன் அவர்களை குருந்தமலைக் குமரன் ஈர்த்து ஆட்கொண்டது ஓர் சுவையான வரலாறு. அவர் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அப்போது வேலை பார்த்து வந்தார். தமது தலைதீபாவளியின் போது 1963 ஆம் ஆண்டில் பழநி சென்று பழநி ஆண்டவரை தரிசித்து வரும்போது அங்கே குழந்தை முருகன் படம் ஒன்றை வாங்கி வந்து தமது வீட்டில் பூஜை அறையில் வைத்து வணங்கி வந்தார். அவரது மனைவிக்கு அவ்வப்போது முருகன் அரூபமாகக் காட்சியளித்து பேசுவனாம். ஒரு நாள் அவரது பெண் குழந்தை தன்னுடைய மோதிரத்தை விழுங்கிய போதும், மற்றொரு முறை அவரது இல்லத்திற்குத் திருடன் வந்தபோதும் குழந்தை குருநாதன் அவரது மனைவியிடம் தெரியப்படுத்தி அவர்களுடைய துன்பத்தை நீக்கியுள்ளான். அத்துடன் அவர்கள் பூஜை செய்து நைவேத்யம் செய்யும் வாழைப்பழம், சர்க்கரைப்பொங்கல், கேசரி, வடை முதலிய பிரசாதங்களில் குழந்தை வேலனின் கைவிரல்கள் பதிந்திருக்குமாம். சிலசமயம் படத்திலுள்ள குழந்தை முருகனது வாயில் அவை ஒட்டிக் கொண்டும் அவன் அருள்விளையாடல் செய்வானாம். அத்துடன் நில்லாது முருகன் அண்ணன் விநாயகரது படத்திலுள்ள தும்பிக்கையிலும் பிரசாதம் காணப்படுவதும் உண்டாம்.

இதனால் தீவிர முருக பக்தரான திரு. பாலசுப்ரமண்யம் நெய்வேலியில் நண்பர்களுடன் முருகன் சேவா சங்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து ஆறுமுகப் பெருமானுக்கு லட்சார்ச்சனை, ஸ்கந்தசஷ்டி விழா முதலியன நடத்தி வருவராம். தற்போது நாசிக் பஞ்சவடி முருகன் கோயிலிலும் இப்பணி தொடர்கிறது. 1969 ஆம் ஆண்டு குழந்தைக் குமரன் தெரிவித்தபடி மூன்றாண்டுகள் கழித்து அவன் அருள் பெற்ற ஆண் குழந்தை பிறந்ததாம் அக்குழந்தைக்கும் முத்துக்குமரன் என்று பெயரிட்டுள்ளார்.

1977 ஆம் ஆண்டு ஒருநாள் முருகன் ஒரு திருவிளையாடல் புரிந்தான். அன்று திடீரென அவரது மனைவி குருந்தமலை குழந்தை வேலா! வா!  என்றாள். இவர் அதைக் கேட்டு குருந்தமலை எங்கேயிருக்கிறது முருகா? என்றார். அதற்கு அந்த மாய முருகன் கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையம் போகும் வழியில் இருக்கிறது. 700 வருஷத்துக் கோயில். அருணகிரிநாதன் பாடியிருக்கிறான். குருந்தமரம் ஸ்தல விருக்ஷம்; சீரஞ்ஜீவி ஆஞ்ஜனேயன் பாதம் ஒன்று அங்கு இருக்கிறது. மற்றொரு பாதம் குருடுமலையில் உள்ளது. சூரிய ஒளி மார்ச் 22, 23 தேதிகளில் பூஜை செய்யும் என்று குருந்தமலை பற்றிய விவரங்களை குழந்தை வேலன் கூறியுள்ளான். பிறகு தன் குடும்பத்தாருடன் குருந்தமலை குழந்தை வேலனை சென்று தரிசித்தாராம். அது முதல் அவருக்கு குருந்தமலை முருகன் மீது தீவிரமான பக்தி ஏற்பட்டது. முருகன் திருவருள் உணர்த்திய வண்ணம் அப்பெருமானது திருப்பீடத்திற்கு வெள்ளிக்கவசம் மற்றும் உற்சவருக்கு வெள்ளி வேல் ஒன்றும் செய்து காணிக்கையாக அளித்துள்ளார். முருகன் திருவருளால் பிறந்த அவரது சத்புத்திரன் திரு. முத்துக்குமரன் நாசிக் நகரில் இயந்திரக்கருவிகளைத் தயாரிக்கும் சிறந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
 
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம், கடன்தொல்லை, திருமணத்தடை, பாவ விமோஷனம், திருஷ்டி போன்றவற்றிற்காக பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனைகள் நிறைவேறியதும், மூலவருக்கு அபிஷேகம், அன்னதானம் செய்தல் காரியம் கை கூடுகிறது. சத்ரு சம்ஹார திருட்ஷத அர்ச்சனை செய்யப்படுகின்றன. 
    
 தலபெருமை:
     
  அகத்தியர், அருந்தவன், ஆதவன் பூஜித்த ஸ்தலம். 800 ஆண்டுகளுக்கு முன் கட்டிய திருக்கோயில். குருந்தமலையில் சித்தர்கள் வாழ்வதாகவும், இத்திருத்தலத்தை சுற்றி 1 மைல் சுற்றளவிற்கு வீடுகள் இல்லை என்பதும் மதுரை மத்துவராயர் பாலயத்தார் கோயில் மாணியமாக 100 ஏக்கர் பூமி கொடுத்துள்ளனர் என்பதும் இன்றும் இந்த நிர்வாகம் இன்றும் பராமரித்து வருகிறது. குருந்தமலைக்கு வடக்கேயுள்ளது பகாசுரன்மலை அதன் அருகே ஆரவல்லி, சுரவல்லி கோட்டைகள் இருப்பதாகக் கூறுகின்றனர். கிழக்கே உள்ளது வள்ளிமலை. இங்கு காணாச்சுனை என்ற பெயரில் சிறிய பொந்து போல ஒரு சுனை உள்ளது. குறுகிய பாத்திரத்தால்தான் அதிலிருந்து தண்ணீர் எடுக்க இயலும். ஆனால் சுனையின் ஆழம், தண்ணீர் அளவு எவ்வளவு என்பதை அறிய முடியவில்லை. கருநொச்சி என்ற மூலிகைச் செடி இம்மலையில் நிறைய உள்ளது. வள்ளிமலையில் உள்ள குகையில் வள்ளிநாச்சியார் திருவுருவம் உள்ளது.

இலக்கியங்கள்: சிரவணபுரம் கவுமாரமடாலயம் தவத்திரு கந்தசுவாமி சுவாமிகள் குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி மீது பல பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.

1. குருந்தமலை ஸ்ரீ கெம்பீர விநாயகப் பதிகம்
2. குருந்தமலை ஸ்ரீ குழந்தை வேலாயுத மாலை
3. குழந்தை வேலாயுத சுவாமி பிள்ளைத்தமிழ்
4. குருந்தமலை திருப்புகழ்
5. குருந்தாசலப் பதிற்றுப் பத்தந்தாதி
6. குருந்தமலை ஸ்ரீ ஆஞ்சனேயர் பதிகம்

மேலும் உடுமலை சரபகவி பாலகவி ஜி.டி. அரங்கசாமி தாஸ் அவர்களால் பாடப் பெற்ற குருந்தமலைத்திருப்புகழ். சின்னமத்தம்பாளையம், சொர்ணமணி நாராயணசாமி அவர்கள் பாடியுள்ள குழந்தை வேலாயுதசாமி துதிமாலை ஆகிய பாடல்களும் உள்ளன.
 
     
  தல வரலாறு:
     
  பணியும் அடியார் சிந்தை மெய்ப்பொருளதாகநவில் சரவணபவா வொன்று வர்க்கரமு மாகி வளர் பழநிமலை மேல் நின்ற சுப்ரமண்யா அமரர் பெருமாளே என்று சந்தத் தமிழ்க் கொண்டல் அருணகிரிநாதர் பழநிப்பரமனைப் பாடிப்பரவிய அந்த பழநி முருகன் போன்று இந்த குழந்தை வேலாயுதனும் மேற்கு நோக்கி அடியார்களுக்கு அருள்புரிந்து வருகிறான். குருந்தமலைக்குமரன் எழிற்கோலம் வார்த்தைகளால் வருணிக்க இயலாது இங்கே அருணிகிரிநாதரின் சுந்தரலங்காரப்பாடல் நமது நினைவுக்கு வருகிறது. ஆன்மாக்கள் ஆணவ மலத்திலிருந்து நீங்கித் திருந்தி உய்யுமாறு உலகங்கள் யாவையும் பெற்றருளிய பொன் பதுமைப் போன்றவள் உமர தேவியார். அவரது தெய்வீகமான தனத்திலிருந்து பெருகிய ஞானப்பாலைப் பருகி சரவணப் பொய்கையில் உள்ள தாமரை மலர்த் தொட்டிலில் ஏறி கார்த்திகைப் பெண்களாகிய அறுவர் திருமுலைப்பாலையும் உண்ணவிழைவு கொண்டவன் குமரன். அவன் சமுத்திரம் அழவும், கிரௌஞ்சமலை அழவும், சூரபன்மன் அழவும், தானும் விம்மி விம்மி அழுத அந்த இளங் குருந்தை - குழந்தையை குறிஞ்சிமலைக் கிழவன் (தலைவன்) என்று உலகம் கூறுகின்றதே.

திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர் கொங்கை
விரும்பிக் கடல் அழக் குன்றழச் சூர்அழ விம்மிஅழும்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்(று) ஓதும் குவலயமே

இப்படிப்பட்ட குழந்தையைக் கிழவன் என்று இவ்வுலகம் கூறுகின்றதே! என்று நயமாகப்பாடுவார் அருணகிரியார். குருந்தமலை குழந்தைவேலனைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இந்த அழகனை இருவகை அலங்காரம் செய்து பார்த்து மகிழ்கிறார்கள். ஒன்று ராஜ அலங்காரம்; மற்றொன்று வேட அலங்காரம். இக்குமரனை அணைத்து உச்சிமோந்து தாலாட்டுப் பாடியும், சப்பாணிக் கொட்டச் செய்தும், முத்த மிட்டும், அம்புலிகாட்டியும், சிறுபறை முழக்கியும், சிறுதேர் உருளச் செய்தும் பிள்ளைத்தமிழ்பாடி பார்த்துக் களித்தவர் தவத்திரு கந்தசுவாமி சுவாமிகள். முற்காலத்தில் இங்கு குழந்தை வேலாயுதன் குருந்தமரத்தடியில் குறு முனியான அகத்தியருக்கு உபதேசம் செய்தான். அவர் பூசித்த அகத்திய லிங்கமும் இக்கோயிலில் உள்ளது. இங்கு குருந்தமரம் தலவிருட்சமானதால் இதற்கு குருந்தமலை என்று பெயர் பெற்றிருக்கிறது. திருப்பெருந்துறையில் குருவாய் வந்து குருந்த மரத்தடியில் மாணிக்கவாசகரை ஆட்கொண்டு சிவபுராணம் பாடவைத்தார் சிவபெருமான். எனவே குருந்தமரத்தின் பெருமையை மணிவாசகர் வரலாற்றிலிருந்தும் உணரலாம். அடியார்கள் அவசியம் இம்மலையில் குருந்தமரக்கன்றுகளை நட்டு வளரச் செய்து இம்மலைக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

அக்காலத்தில் கொங்குநாட்டில் இருந்த 24 பிரிவுகளில் ஒன்று ஒடுவங்க நாடு. தற்காலத்தில் கோயம்புத்தூர் அவிநாசி மேட்டுப்பாளையம் முதலான பகுதிகளை உள்ளடக்கிய பிரிவாகும். இதன் வடபகுதி அகத்தியமலை என்னும் நீலகிரியும், கிழக்கில் மாதேச்வரன் மலையும், தெற்கில் சதுர்காட்டாஞ்யென்னும் சஞ்ஜீவிமலையும் மேற்கில் தோகை மலையும் உள்ளன. இதன் நடுநாயகமாக குருந்தமலை அமைந்துள்ளது சிறப்பாகும். குருந்து என்று சொல்லுக்கு குருந்தமரம், குழந்தை, குருந்தக்கல் என்றபொருள்கள் உண்டு. அத்துடன் காட்டு நாரத்தை, காட்டு எலுமிச்சை, வச்சிரக்கல், வெண் குருத்து என்பதையும் குருந்து என்ற சொல்லால் அழைப்பர். மலைகளில் எல்லாம் குருந்தானது - இளமையானது குருந்தமலை, வடிவத்தில் சிறியது; வடிவழகிற் சிறந்தது. இங்கு ஒரு காலத்தில் குருந்தமரங்கள் நிறைந்திருந்தன. இம்மலை 150 அடி உயரம் உடையது. சுற்றியுள்ள பெருமலைகளைக் கண்ணுற்று இந்தக் குருந்தமலையும் நோக்கும்போது இதன் இளமைத்தன்மை தெரியும். சின்னஞ்சிறு குழந்தைகளிடமும் கள்ளமில்லாப் பிஞ்சு உள்ளங்களிலும் இறைவன் குடிகொண்டிருப்பது போன்று இந்த மலைகளின் குருந்தாகிய குருந்தமலையின் குமரன் குழந்தை வேலாயுத சுவாமி என்ற பெயரில் அருளாட்சி செய்கிறார்.  கருவறையில் குழந்தை வேலாயுத சுவாமி மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சுமார் நான்கடி உயரத்தில் வலது கையில் தண்டம் ஏந்திய அவனது திருக்கோலம் பழநிமலை தண்டாயுத பாணியை நினைவுறுத்தும் வகையில் அமைந்துள்ளார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மார்ச் மாதத்தில் 22ம் தேதியில் அஸ்தமான சமயத்தில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் பாதம் முதல் மார்பு வரை படர்வது சிறப்புமிக்கதாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar