Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கரிவரதராஜ பெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
  தல விருட்சம்: அரசமரம்
  தீர்த்தம்: நொய்யல் நதி
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ர ஆகமப்படி மூன்று கால பூஜைகள்
  புராண பெயர்: தேனூர், அன்னதான சிவபுரி, சதுர்வேதி மங்கலம், வள்ளலூர், வேளிர்ஊர், சர்க்கார் அக்ரஹார வெள்ளலூர்.
  ஊர்: வெள்ளலூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இந்த கோயிலில் சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் நடந்துவருகின்றன. ஸ்ரீராமநவமி, ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம் போன்ற விழாக்களும், சக்கரத்தாழ்வாருக்கு சித்திரை நட்சத்திரத்தன்றும், ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தன்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடந்துவருகின்றன. புரட்டாசி மாதம், அஸ்த நட்சத்திரத்தன்று தொடங்கி பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக ஒருவாரம் கொண்டாடப்படும். இதில் திருக்கல்யாண வைபவம் முக்கிய நிகழ்வாகும். தினமும் கருடவாகனத்தில் உட்பிராகார உலா நடைபெறும். புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்புத் திருமஞ்சனமும் கருட வாகனப் புறப்பாடும் உண்டு.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தில் மூன்று கருடாழ்வார்கள் சேவை சாதிப்பு மிகச் சிறப்புமிக்கதாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.45 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கரிவரதராஜபெருமாள் திருக்கோயில், வெள்ளலூர் - 641 111, போத்தனூர் வழி, கோயம்புத்தூர்.  
   
போன்:
   
  +91 93629 59219, 98422 12157 
    
 பொது தகவல்:
     
  இப்பகுதி பண்டைய காலத்தில் முக்கிய வணிக மையமாகத் திகழ்ந்துள்ளது என்பதற்கு 1842 மற்றும் 1931-ம் ஆண்டில் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த ரோமானிய நாணயங்களும் மண்பாண்டங்களுமே சான்று. இவ்வூரின் வரலாற்றுப்பெருமையை கல்வெட்டுகள், பழங்கால இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. மேலும் கோயிலின் அர்த்த மண்டபத்தில் உள்ள சுவரில் கல்வெட்டுச் செய்திகள் காணப்படுகின்றன. கி.பி. 10-ம் நூற்றாண்டில் சோழமன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாக, சோழன் பூர்வ பட்டயத்தில் சொல்லப்பட்டுள்ளது. கோயில் கட்டுமான பணியின் போது கிடைக்க அரியவகை கற்சிற்பங்களும் வரி ஓடுகளும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே இங்கு கோயில் இருந்துள்ளதையும், வழிபாடுகள் நடந்துள்ளதையும் உறுதி செய்கின்றன. காலமாற்றத்தால் இந்த கோயிலின் விமானம், சிற்பங்கள் மற்றும் மண்டபங்கள் சிதிலமடைய, சுமார் இருநூறு ஆண்டுகளாக எந்தவிதமான திருப்பணியோ, முறையான பூஜைகளோ நடைபெறாமல் பாழடைந்து போனது. இந்நிலையில் கோயிலைப் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

கருவறையும் அர்த்த மண்டபமும் முன்பிருந்த வடிவிலேயே மிகவும் நேர்த்தியாகவும், மூன்று நிலை விமானம் கலைநயத்துடனும் அமைக்கப்பட்டது. திசைக்கு மூவர் வீதம் நான்கு திசைகளில் பன்னிரு சுதைச் சிற்பங்கள் வடிக்கப்பட்டு, கோயில் கும்பாபிஷேகம் கண்டு இன்று புதுப்பொலிவுடன் திகழ்கிறது. பசுமையான மரங்கள் அடர்ந்த சோலையின் நடுவே அமைதியான சூழலில், அமைந்த கோயிலின் எதிரே பலிபீடத்தை அடுத்து செப்புத் தகடுகளால் வேயப்பட்ட கொடிக்கம்பம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. சோபன மண்டபத்தில் சக்கரத்தாழ்வார், நரசிம்மர், வீர ஆஞ்சநேயர் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். கிருஷ்ண தேவராயர் அரசவையில் இருந்த வியாசராஜர் என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வீர ஆஞ்சநேயர் மார்பில் சாளகிராம மாலையையும், வாலில் மணியையும் அணிந்த நிலையில் ஒரு கையில் மலரை ஏந்தியுள்ளார். மகாமண்டபத்தில் மணவாள மாமுனி ராமானுஜர், நம்மாழ்வார் திருமங்கையாழ்வார், காளிங்கநர்த்தனர் அருள, அர்த்தமண்டப நுழைவாயிலில் ஜெயன், விஜயன் கம்பீரமாக இருக்கிறார்.

கருவறையின் பின்புறம் மகாலட்சுமி மற்றும் ஆண்டாள் ஆகியோர் தனிச் சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். மகாலட்சுமி சன்னிதி விமானத்தின் எட்டுத் திக்குகளையும் அஷ்டலட்சுமியின் சுதைச்சிற்பங்கள் அழகுசெய்கின்றன. கருவறையின் வெளிப்புறச் சுவரில் பாம்பணையில் பள்ளிகொண்ட பெருமாளின் புடைப்புச் சிற்பமும், அருகே சுந்தரபாண்டிய மன்னன் காலத்தில் சூலூர் குளத்தைப் பராமரிக்க ஊழியர் ஒருவரை நியமித்தது குறித்த செய்தி பொறிக்கப்பட்ட கல்வெட்டும் காணப்படுகிறது. கோயிலுக்கு முன்பாக ஒரு தெப்பக்குளம் இருந்தாகவும் அதற்கு நீர் வர நொய்யலாற்றிலிருந்து வழிப்பாதை இருந்தாகவும் அக்குளத்தில் தெப்போற்சவம் அக்காலத்தில் நடந்ததாகவும் செவிவழிச் செய்தி மூலம் அறியப்படுகிறது. இக்குளம் தற்போது இல்லை. முன்பு நொய்யல் நதி நீர் தீர்த்தமாகவும் விளங்கியது. நதி வறண்டு விட்டதால் தற்போது கிணற்றுநீரையே தீர்த்தமாகப் பயன்படுத்துகின்றனர். பாஞ்சராத்ர ஆகமப்படி மூன்று கால பூஜைகள் நடந்து வருகிறது.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை, வழக்குகளில் வெற்றி பெற, தொழிலில் மேன்மை அடைய இங்கு பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இவருக்கு துளசி சாத்தி வழிபட்டால் திருமணத்தடை அகலும், தொழில் மேன்மையடையும், வழக்குகளில் வெற்றிகிட்டும் என்பது நம்பிக்கை. 
    
 தலபெருமை:
     
  சோபன மண்டபத்தில் கருடாழ்வார், பெருமாளை நோக்கியவராக சேவை சாதிக்கிறார். மகாமண்டபத்தையும் சோபன மண்டபத்தையும், இணைக்கும் சுவரில் செவ்வக வடிவில் ஒரு துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. கருடாழ்வாரைத் தொழுதுவிட்டு அர்த்தமண்டப வாயிலை நோக்கிச் செல்லும்போது, அத்துவாரத்தின் வழியே விமானத்தின் மீது அமைந்துள்ள பெருமாளின் திருவடியில் தொடங்கி கோபுரக்கலசம் வரை ஒவ்வொரு பகுதியாக தரிசித்துக் கொண்டே செல்லும் வகையில் அமைந்துள்ளது சிறப்பு. அர்த்த மண்டப நுழைவாயிலில் உள்ள நிலவுக்கல்லில் கஜேந்திர மோட்சக் காட்சியுடன் கருடன் உள்ளார்.

மகா மண்டப உள் நிலவுக்கல்லில் கருடாழ்வார் அமிர்த கலசத்துடன் அருள்பாலிக்கிறார். ஆக இத்தலத்தில் மூன்று கருடாழ்வார்கள் சேவை சாதிப்பதும் சிறப்பு. கருவறைக்கு தெற்கில் விமானத்துடன் கூடிய தனிச்சன்னிதியில் பெருமாள், விநாயகர், காளிங்க நர்த்தனர் ஆகிய மூவரும் ஒரே சன்னதியில் கிழக்கு நோக்கிய வண்ணம் அருள்பாலிக்கின்றனர் சோபன மண்டப விதானத்தில் பன்னிரு ராசிகளின் உருவங்களை புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர். மேற்கண்ட இரு அம்சங்களும் வைணவ தலங்களில் காணப்படுவது அபூர்வம்.
 
     
  தல வரலாறு:
     
  புராதனக் கோயில்களில் வியாபித்திருக்கும் தெய்வீக அதிர்வுகளையும், ஆற்றலையும் புது கோயில்களில் காணமுடிவதில்லை என்பதே உண்மை. ஆனால் அப்படிப்பட்ட கோயில்கள் பல பராமரிப்பின்றி, கேட்பாரற்று சிதைந்த நிலையில் உள்ளன. சில கோயில்கள் பக்தர்கள் உதவியுடன் பழமை மாறாமல், புதுப்பிக்கப்பட்டு தினசரி பூஜைகளும், முக்கிய வைபவங்களும் சிறப்பாக நடந்து வருகின்றன. அவற்றுள் ஒன்று கோவை வெள்ளலூரில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோயில். இவ்வூருக்கு மாரியம்மன், மாகாளியம்மன், பேச்சியம்மன், ஆனைமலையம்மன், அழகு நாச்சியம்மன் ஆகியோர் காவல் தெய்வங்களாக வீற்றிருக்கின்றனர்.

வரலாற்றில் காஞ்சிமாநதி என்றும்ல, தற்போது நொய்யல் நதி என்றும் அழைக்கப்டும் ஆற்றின் தென்கரையோரம் அமைந்த வெள்ளலூர், இருபத்து நான்கு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த பண்டைய கொங்கு தேசத்தில் வாயறைக்க நாட்டின் ஒரு பகுதியாக விளங்கியது. கேரளாவையும் தமிழகத்தையும் இணைக்கும் ராஜகேசரி பெருவழியில் அமைந்த ஊர். தேனூர், அன்னதான சிவபுரி, சதுர்வேதி மங்கலம், வள்ளலூர், வேளிர்ஊர், சர்க்கார் அக்ரஹார வெள்ளலூர் எனவும் அக்காலத்தில் இவ்வூர் அழைக்கப்பட்டிருக்கிறது. கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலர்ந்த முகத்துடன் கரிவரதராஜபெருமாள் சங்கு, சக்கரம், கதை ஏந்தி அபயஹஸ்த முத்திரையுடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் மூன்று கருடாழ்வார்கள் சேவை சாதிப்பு மிகச் சிறப்புமிக்கதாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar