ஸ்ரீசக்கரத்தின் மீது அமர்ந்தபடி, சின்முத்திரை திகழ, அழகுறக் காட்சி தருகிறார் ஐயப்ப சுவாமி. எனவே, இந்த தலத்திற்கு வந்து ஐயப்பனை தரிசித்தால் நவக்கிரக தோஷங்கள் யாவும் நீங்கும்; சகல ஐஸ்வரியங்களோடு நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் பக்தர்கள். இங்கு, மாதம் ஒரு முறை ஸ்ரீசக்கர பூஜை விமரிசையாக நடைபெறுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
கேரள முறைப்படி ஐயப்பன், விநாயகர், பகவதி, சிவன், குருவாயூரப்பன், முருகன் மற்றும் நவக்கிரகங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன.
பிரார்த்தனை
குழந்தை வரம் கிடைக்க, சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க பக்தர்கள் இங்குள்ள ஐயப்பனை வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
ஐயப்பனுக்கு நீராஞ்சன தீபம் ஏற்றியும், நெய் விளக்கு ஏற்றியும் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
தூய்மையுடனும், பொலிவுடனும் அமைந்துள்ளது ஆலயம், நைவேத்தியப் பிரசாதங்கள் தயாரிப்பதற்கு மடப்பள்ளி, நடைப்பந்தல், சுத்தமான தேக்கு மரத்தாலான சுற்றம்பலம், நமஸ்கார மண்டபம் ஆகியவை கேரள தச்சு வேலைப்பாடுகளுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. ஐயப்ப சுவாமியின் சுற்றம்பலத்தில் சுற்று விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன. மாலை வேளையில், பிரகாசமாக ஒளிவீசும் விளக்குகளைக் காணக் கண்கோடி வேண்டும். தங்க கொடிமரம், தினமும் சுமார் 500 பக்தர்களுக்கு அன்னதானம் (கார்த்திகை துவங்கி விரத காலங்களில் தினமும் சுமார் 2, 500 பேருக்கு அன்னதானம் நடைபெறுமாம்) சுதந்திரத் திருநாளில் சமபந்தி போஜனம் என அமர்க்களப்படுகிறது ஆலயம். சுவாமி குடிகொண்டிருக்கும் கருவறையில் மேற்கூறையை தங்கத்தில் (சுமார் 25 கிலோ) வேய்ந்திருக்கிறது ஆலய நிர்வாகம். பிரதோஷம் ஏகாதசி, கிருத்திகை, சிவராத்திரி, போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. விஜயதசமி நன்னாளில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் எனும் நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. மணக்க மணக்க சந்தனம், திவ்வியமான தீர்த்தம், சுவாமிக்கு அணிவித்த மலர்கள் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன. ஐயப்பனை மனதார தரிசித்து, பிரசாதங்களை பெற்று சென்றால், நம் வாழ்க்கையையும் மணக்க செய்வான் மணிகண்டன்.
தல வரலாறு:
சுமார் 60 வருடங்களுக்கு முன்பு, பக்தர்கள் சிலர் ஐயப்ப சுவாமியின் சிறிய படமொன்றை வைத்து பூஜித்து வந்தனர். 68ம் வருடம் ஐயப்பன், விநாயகர், பகவதியம்மன், முருகப்பெருமான், சிவபெருமான் ஆகியோருக்கு விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்து வழிபடத் துவங்கினர். 69ம் வருடம், பிரம்மஸ்ரீ பாலக்காட்டில்லத்து பெரிய நீலகண்டன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. கேரள பாரம்பரிய முறையில் இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன. இத்திருக்கோயிலில் 19 வருடங்களாக மேல்சாந்தியாக இருந்த எழிக்கோடு சசிநம்பூதிரி சபரிமலை மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்பது இக்கோயிலுக்குப் பெருமை சேர்க்கும் செய்தி.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஸ்ரீசக்கரத்தின் மீது அமர்ந்தபடி, சின்முத்திரை திகழ, அழகுறக் காட்சி தருகிறார் ஐயப்ப சுவாமி. எனவே, இந்த தலத்திற்கு வந்து ஐயப்பனை தரிசித்தால் நவக்கிரக தோஷங்கள் யாவும் நீங்கும்; சகல ஐஸ்வரியங்களோடு நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் பக்தர்கள். இங்கு, மாதம் ஒரு முறை ஸ்ரீசக்கர பூஜை விமரிசையாக நடைபெறுகிறது.