மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 3 · பக்கம் 58 · 117 / 159

கல்லிலே கலைவண்ணம்

  • சிற்றாலயம் மண்டபம், மண்டபம், கோபுரம் போன்ற கோயில் கட்டுமானங்களை கட்டியது குறித்தும் பிற்காலப்பாண்டியர்களின் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் ‘விரதம் முடித்த ஈஸ்வரமுடையார்’ என்ற பெயரில் மதுரைக் கோயில் வளாகத்தில் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அருளாளன் சேவகத் தேவனான வாணாதிராயன் நடராஜருக்காக அதிரவீசியாவார் திருமண்டபம் (நடராஜர் சன்னதி) ஒன்றை எடுப்பித்துள்ளான். இவனே திருவாலவாயுடையார் கோயிலைச் சுற்றி திருநடை மாளிகையை எடுப்பித்துள்ளான்.
  • மதுரைக் கோயில் திருத்தேரினைப் புதுப்பித்து எழுநிலைக்கோபுரத்தினையும் திருப்பணி செய்து முடித்தான் இவ்வாணாதிராயன் இதற்காக இவன் ஆண்மர் நாட்டிலுள்ள சோழ பாண்டிய நல்லூர் என்ற ஊரினைத் தானமாகத் தந்துள்ளான்.

கல்வெட்டுகள்

மதுரையில் ஆட்சி செய்த பிற்காலப் பாண்டிய மன்னனான சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 – 1216) காலத்தில் இருந்து ஆங்கிலேயர் காலம் வரையிலான அறுபத்து நான்கு கல்வெட்டுகள் தொல்லியல் துறையால் இதுவரை படியெடுக்கப்பட்டுள்ளன.

கால முறைப்படி இவற்றின் எண்ணிக்கை பின்வருமாறு அமைந்துள்ளது.

  1. பிற்காலப் பாண்டியர் காலம் – 44 கல்வெட்டுகள்
  2. விஜயநகர மதுரை நாயக்கர் காலம் – 19 கல்வெட்டுகள்
  3. ஆங்கிலேயர் காலம் – 01 கல்வெட்டு மொத்தம் – 64 கல்வெட்டுகள்

கல்வெட்டு குறிப்பிடும் அரசர்கள் பிற்காலப் பாண்டிய மன்னர்களில்

  • முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1194)
  • முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 – 1244 )
  • இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்(1238 – 1255)
  • இரண்டாம் மாறவர்மன் விக்கிரம பாண்டியன்(1250 – 1276)
  • முதலாம் குலசேகர பாண்டியன் (1268 – 1318)
  • மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் (1315 – 1334)
  • பாராக்கிரம பாண்டியன் ஆகியோரது கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகிறன்றன. பாண்டியர் கால கல்வெட்டுகளில் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுகளே எண்ணிக்கையில் அதிக அளவில் உள்ளன. இம்மன்னன் காலத்தில் மதுரைக் கோயில் பல திருப்பணிகளைக் கண்டு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது.

விஜயநகர மன்னர்களில்

  • கிருஷ்ண தேவராயர் (1509 – 1529)
  • அச்சுத தேவராயர் (1529 – 1542)
  • சதாசிவராயர் (1542 – 1570) ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன.

மதுரை நாயக்க மன்னர்களில்

  • வீரப்ப நாயக்கர் (1572 – 1595)
  • குமார கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 – 1601)
  • முத்து வீரப்ப நாயக்கர் (1609 – 1623)
  • திருமலை நாயக்கர் (1623 – 1659)
  • விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (1706–1732) ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன.
  • 1842ல் பொறிக்கப்பட்ட பச்சையப்ப முதலியாரின் ஆங்கிலேயர் காலத்துக் கல்வெட்டு ஒன்றும் உள்ளது.

நாயக்கர்களின் திருப்பணி

நாயக்கர் காலக் கல்வெட்டுகளில் இக்கோயில் சொக்கநாத சுவாமி கோயில் என்று குறிப்பிடப்படுகிறது. அங்கயற்கண்ணியம்மைக்கும் மீனாட்சியம்மன் என்ற பெயர் இக்காலத்தில் இருந்து வழங்கப்பட்டிருக்கிறது. நாயக்கர் காலத்தில் மதுரைக் கோயில் பெருவளர்ச்சி கண்டது. விஜயநகர மன்னர்களோடு இணைந்து மதுரைக் கோயிலை பெரிய அளவில் நாயக்க மன்னர்கள் விரிவு படுத்தினர். பல கோபுரங்களையும் மண்டபங்களையும் உருவாக்கி தானங்கள் பல அளித்துள்ளனர். அவர்கள் செய்த திருப்பணிகளை பற்றி பார்ப்போம்.

சோழரின் திருப்பணி

சோழமன்னன் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுகள் 1202 – 1203 அளவில் மதுரையை வென்று மதுரையில் வீராபிஷேகமும், விஜயாபிஷேகமும் செய்து கொண்டதைக் தெரிவிக்கின்றன. அவனது வெற்றிச் சிறப்புகளைத் தொகுத்துக் கூறும் மெய்க்கீர்த்திப் பாடல் கல்வெட்டுகள் மதுரைக் கோயிலில் அவன் செய்த திருப்பணிகளையும் எடுத்துக் கூறுகின்றன. இது மதுரை கோயில் குறித்து தெரிவிக்கும் பழங்கால கல்வெட்டுச் சான்றாகும். மதுரையில் குலோத்துங்க சோழன் திருவாலவாயுடையார் கோயிலைச் சுற்றித் தன் பெயரால் திருவீதியை அமைத்தான். சிறப்பு வழிபாடுகள் செய்து அதற்காகத் திருநாட்களையும் குறித்தான். முப்புரங்களையும் நெற்றிக்கண்ணால் எரித்த சொக்கர் திருவீதியுலா வருவதற்கு ஏற்பாடு செய்தான். தன்னைப் பேரரசன் என்றும் கருதாமல் அத்திருவீதிவுலாவை வீதியில் நின்று கண்டு மகிழ்ந்தான். திருவாலவாயுடையார் கோயிலைப் பொன்மலை என்று சொல்லும் படியாக பொன்வேய்ந்தான் என்று பின்வருமாறு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அவனது கல்வெட்டு தெரிவிக்கிறது.

அறந்தரு திருவாலவாயில் அமர்ந்தர்க்குத் தன் பேரால்
சிறந்த பெருந்திருவீதியும் திருநாளும் கண்டருளிப்
பொருப்பு நெடுஞ் சிலையால் முப்புரமெரித்த
சொக்கருக்குத்
திருப்பவனி கண்டருளித் திருவீதியில் சேவித்துத்
தென்மதுரைத் திருவாலவாய் பொன்மலையெனப்
பொன்வேய்ந்து
ஆனால் இச்செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் மீனாட்சியம்மன் கோயிலில் காண முடியவில்லை.

பிற செய்திகள்

மதுரையில் 1547 ல் ஞானக்கூத்தர் என்பவரின் தலைமையில் இயங்கிய மடத்திற்காக நிலம் விடப்பட்டுள்ளது.

வழிபாட்டிற்கு கொடைகள்

கோயில் வழிபாட்டிற்கும் கோயில் பணியாளர்களுக்கும் நாயக்கர் காலத்தில் மானியமாக பலவூர்கள் தானமாகத் தரப்பட்டிருக்கின்றன. விட்டல தேவ மகராஜருக்குப் புண்ணியமாகத் தென்களவழி நாட்டுக் கணக்கன்குடியைச் சார்ந்த பாடி ஏந்தல் என்ற ஊர் தானமாகத் தரப்பட்டடுள்ளது. இதன் வருவாயில் இருந்து கோயிலுக்கு மலர் மாலைகள் வழங்கப்பட்டன. திருமலை நாயக்கருக்குப் புண்ணியமாக மார்கழித்திருநாள் கொண்டாட சில வரிகள் கோயிலுக்கு கொடுக்கப்பட்டன. நாயக்கர் காலத்தில் கோயிலில் சீர்பாதம் தாங்கிகளுக்கு ஊதியமாக பல ஊர்களின் வரிகள் பல முறை தானமாக அளிக்கப்பட்டன. உத்திரமேரூர் மகிபாலகுலகாலச் சேரியைச் சார்ந்த நரசய்யர் என்பவரால் கிருஷ்ண தேவராயர் உபயமாக புனர்பூச நட்சத்திரத்தன்று திருவாலவாயுடையார் திருவீதியுலா எழுந்தருளவதற்கு ஐநூறு பொன்தானமாகத் தரப்பட்டுள்ளது. நாயக்கர் காலத்தில் வாழ்ந்த வெற்றிலை பயிரிடுவோர் விதித்தவரிகள் பற்றியும் அவர்கள் கடமை பற்றியும் தெரிவிக்கிறது ஒரு கல்வெட்டு.

கண்கவரும் ஓவியங்கள்

ஆடலும், பாடலும், சிற்பமும், சித்திரமும், கவிதையும், இசையும் கலந்து இனிக்கும் நிலைக்களமாக மதுரை மாநகர் பெருந்திருக்கோயில் உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் உலகோர் கண்டு வியக்கும் வண்ணம் பேரழகு படைத்தவையாகவும், கலை நயம் கொண்டவையாகவும் அமைந்துள்ளன. இவ்வோவியங்கள் யாவும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. பொற்றாமரைக்குளத்துக்கு அருகிலே அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தின் விதானத்தில் மீனாட்சி திக்கு விஜயத்தையும், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தையும் ஓவியங்களாக தீட்டியிருக்கின்றனர். மீனாட்சியின் திருக்கல்யாணத்தை ராணி மங்கம்மாளும், அவரது அமைச்சரான தளவாய் ராமய்யப்பர் முதலியோர் கண்டு ரசிக்கும் காட்சி ஊஞ்சல் மண்டப விதானத்தில் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. பொற்றாமரைக் குளத்தின் வடக்கு கிழக்கு சுவர்களிலும் நாயக்கர் கால ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வோவியங்கள் மூலம் புராண கதைகளை அறிவதோடு அக்கால மக்களின் ஆடை வகைகள், அணிகலன்கள் போன்றவை பற்றியும் அறிய முடிகிறது.

விளம்பரம்
விளம்பரம்
மேலே
விளம்பரம்