சிறப்பு மலர் · பகுதி 3 · பக்கம் 64 · 134 / 159
நீதியை நிலைநாட்டும் செங்கோல்
இன்று நாம் படிக்கும் செய்தித்தாள்களே நாளைய வரலாறாக உருவாகிறது. தற்போது கணினி முறையில் விரைவாக மின்னூலாக்குதல் போன்ற முறையில் மக்களுக்கு செய்திகளை கொடுப்பதில் பரிணாமவளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் முற்காலத்தில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மனப்பாடமாக சொல்லி சொல்லுதல், கல்லில் செதுக்கி வைத்தல், செப்புப்பட்டயம், ஓலைச்சுவடியில் எழுதுதல், பேரேடாகவும், நூலாகவும் எழுதி, அச்சுக்கோர்த்து வெளியிடுதல் என பலமுறைகளில் நடக்கும். அந்த வகையில் வந்ததுதான் சீதளக்குறிப்பேடு. இது 400 ஆண்டுகள் பழமையானது. திருக்கோயிலை மையமாக வைத்து எழுதப்பெற்ற குறிப்பு என்பதால் இதனை ஸ்ரீதளம் என்று குறிப்பிடுவர். இதுவே மருவி சீதலம், சீதளம் என பெயர் பெற்றது. தினசரி கோயில் நடைமுறை கணக்கு, கோயில் வரலாறு ஆகியவை இடம்பெற்றிருக்கும். நாட்டின் அரசியல் எழுதுபவரே சீதளக்குறிப்பேட்டை எழுதுவர். இவரை சுத்தக்கட்டளை என்பர். இப்படி அரிய பொக்கிஷமான சீதளக்குறிப்பேடு மீனாட்சியம்மன் கோயிலின் கணக்கு அறையில் இருந்துள்ளது. இது துரதிர்ஷ்ட வசமாக செல்லரிக்கப்பட்டது. ஆனாலும் நமக்கு இந்தக்குறிப்பு கிடைத்துவிட்டது. இதற்கு காரணம் மதுரை ஆதினம்தான். எப்படி என்றால் ஒருகாலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலின் நிர்வாகம் மதுரை ஆதினத்தின் மேற்பார்வையில் நடந்துள்ளது. அவர்களிடம் சீதளக்குறிப்பேட்டின் ஒரு பிரதி இருந்தது. அது படிவம் எடுக்கப்பட்டு இன்று கோயிலில் பாதுகாக்கப்படுகிறது. இந்நூலில் சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் செங்கோல் வாங்குவதை பற்றிய குறிப்பு உள்ளது. அந்தக்காலத்தில் இந்நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பதை பார்ப்போமா... திருமலை நாயக்க மன்னர் ஏற்படுத்திய திருவிழாக்களில் மீனாட்சி பட்டாபிஷேகமும் ஒன்று. குலசேகர பாண்டியர் வழி பட்டர், விக்கிரம பாண்டியர் வழி பட்டர் மூலம் இவ்விழா ஆண்டு தோறும் நடைபெறும். இன்றைய தினத்தில் திருமலை நாயக்கர் பக்தி சிரத்தையுடன் விரதம் இருப்பார். அன்று மாலையில் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கும். அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தினை அலங்காரம் செய்து, தீவட்டியாளுடனும், மேள தாள ஆடல் பாடல் வாத்தியங்களுடனும் யாகசாலையில் வேள்வி நடைபெறும். ஏழு சிவாச்சாரியார்கள் கருவூலப்பெட்டியை திறந்து பட்டாபிஷேக கிரீடம், செங்கோல், மகர முத்திரை, மரகதக்கொடி, பொன்எழுத்தாணி, ரிஷப முத்திரை, நாகர முத்திரை போன்றவற்றை திருவாபரண தட்டுகளில் வைத்து அம்மன் சன்னதியில் பூஜை செய்வர். அந்த நேரத்தில் கட்டியக்காரன் வரலாம் என்று அறிவித்தவுடன், 72 பாளையக்காரர்களுடன் (ஊர் தலைவர்கள்) அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையில் நாயக்கர் மன்னர் செங்கோலை வாங்க வருவார். அப்போது வான வேடிக்கை, நடன நாட்டிய பெண்களுடன் அவ்விடமே கோலாகலமாக இருக்கும். யானையில் இருந்து இறங்கிய மன்னர் முன் அம்மனுக்கு சோடஷ உபச்சார தீபாராதனைகள் நடைபெறும். வேதம், ஆகம திருமுறைகள் ஓதப்படும். பின்னர் சுவாமி அம்மனுக்கு சாற்றிய நிலை மாலைகளில் ஒன்றை எடுத்து மன்னருக்கு அணிவிப்பார்கள். விபூதி பிரசாதம், பரிவட்டம் போன்ற சகல விதமான மரியாதைகளும் செய்யப்பட்ட பின்னர் செங்கோலை எடுத்து மன்னர் கைகளில் கொடுப்பார்கள். குதிரை, பாளையப்பட்டு துரை, சுருட்டி, பல்லக்கு, பரிவாரங்கள் சகல வாத்தியங்களுடன் பட்டணப்பிரவேசம் வருவார் மன்னர். பிறகு அரண்மனையின் ஆஸ்தான மண்டபத்திற்கு சென்று, உயர்ந்த ஆசனத்தில் செங்கோலை வைத்து அதன் அருகே மன்னர் அமர்வார். சிவாச்சாரியார்கள் செங்கோலுக்கு நைவேத்தியம், சகல விதமான தீபாராதனைகளையும் செய்வர். மன்னர் முதலான ஏனைய ஊர் தலைவர்களும் செங்கோலுக்கு மரியாதை செலுத்தி வணங்குவார்கள். பின் ஸ்தானீகர்கள், சிவாச்சாரியார்களுக்கு பொற்கிழி, சால்வைகள், கேடயங்கள் என அரசவெகுமதியாக வழங்கப்படும். அன்றைய நாள் முழுவதும் செங்கோல் அந்த உயர்ந்த ஆசனத்திலேயே இருக்கும். மறுநாள் பூஜை செய்து கோயிலுக்கு எடுத்து வரப்படும். அன்றைய தினமே மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும். இந்த நடைமுறை விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (1706 – 32) வரை பின்பற்றப்பட்டது. இதன்பிறகு சகோதரர்களான சீமை வேங்கிடப் பெருமாள் நாயக்கர், பெரிய வேங்கிடப் பெருமாள் நாயக்கர் இருவருக்கு இடையே ‘யார் செங்கோல் வாங்குவது’ என சண்டை வந்தது. இதனால் அரண்மனை புரோகிதரான பேரைய்யப்பட்டரை செங்கோல் வாங்கச் சொன்னார்கள். அவரும் போய் வாங்கினார். ஆனால் சில நாளில் அவர் காலமானார். இச்சம்பவத்திற்கு பின் இந்நடைமுறை மாற்றப்பட்டது. 1734 முதல் கோயிலின் சிவாச்சாரியாரான சதாசிவப்பட்டர் செங்கோலை வாங்கினார். அவர் திருக்கோயிலுக்கு உள்ளாகவே மேளதாளத்துடன் சன்னதியை வலம் வந்து செங்கோலை அம்மனுக்கு சமர்ப்பித்தார். அதோடு மேள தாளத்துடன் அரண்மனையின் கட்டளை அதிகாரி வேங்கிடகிருஷ்ண நாயக்கருக்கும் பரிவட்ட மரியாதை செய்யப்பட்டது. அன்று முதல் இந்த நடைமுறையே தொடர்ந்தது. தற்போது தர்மாகர்த்தாக்குழுவின் தலைவர் செங்கோலை வாங்குகிறார். இப்படி வழிவழியாக செங்கோல் வாங்கிய நிகழ்வு சீதளக் குறிப்பேட்டில் விரிவாக உள்ளது.
மல்குக வேத வேள்வி, வழங்குக சுரந்து வானம், பல்குக வளங்கள் எங்கும், பரவுக அறங்கள் இன்பம், நல்குக உயிர்கட் கெல்லாம், நான்மறைச் சைவம் ஓங்கிப் புல்குக உயிர்கட் கெல்லாம், புரவலன் செங்கோல் வாழ்க.
— திருவிளையாடல் புராணம்