சிறப்பு மலர் · பகுதி 3 · பக்கம் 65 · 140 / 159
சிவன் எழுதிய கடிதம்
பாணபத்திரரின் வறுமையை போக்க மதுரை சொக்கநாதர் சேரமானுக்கு திருமுகம் எழுதி உதவி செய்ததை கூறுவது திருமுகம் கொடுத்த படலம். திருமுகம் என்பது திரைச்சீலையில் (துணியில்) பாட்டு வடிவில் எழுதும் கடிதம். சிவபக்தி கொண்ட பாணபத்திரர் யாழிசை பாடும் கலைஞர். செல்வம் இன்றி அன்றாட உணவுக்கே சிரமப்பட்டார். திருமுகப்பாசுரம் ஒன்றை எழுதி பாணபத்திரர் தூங்கும்போது அருகில் வைத்த சொக்கநாதர், “பாணபத்திரா, உன் வறுமை தீர சேரமானுக்கு ஓலை தருகிறோம். அதை கொடுத்து பொருள் பெறுவாயாக.” என திருவாய் மலர்ந்தருளினார். பாணபத்திரரும் மகிழ்ச்சியுடன் மலை நாட்டை நோக்கிப் பயணித்தார். மன்னர் சேரமானிடம் ஓலையைக் காட்டினார். கருவூலத்திற்கு அழைத்துச் சென்ற மன்னர், “சிவத்தொண்டனே, விருப்பம் போல் பொருளை எடுத்துக் கொள்க” என வேண்டினார். பாணபத்திரர் தனக்கு வேண்டிய அளவு எடுத்து மதுரைக்கு புறப்பட்டார். அப்பொருளை தான் அனுபவித்ததோடு வறியவர்களுக்கும் கொடுத்தார்.