சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 35 · 59 / 159
மூர்த்திக்கும் அடியேன்
அறுபத்து மூன்று நாயன்மார்களும் தொண்டுகள் பல செய்து சிவபெருமானை வணங்கினர். அந்த வரிசையில் மதுரையில் வணிகர் குலத்தில் தோன்றியவர்தான் மூர்த்தி நாயனார். இவர் சொக்கநாதருக்கு சந்தன காப்பிடுவதற்கும், அபிஷேக, அலங்காரத்திற்கான சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியை செய்தவர். ஒரு சமயம் கன்னட தேசத்தை சேர்ந்த மன்னர் மதுரையை கைப்பற்றினார். அவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதால் மக்களை சமண சமயத்திற்கு மாற்ற முயற்சித்தார். அவ்வாறு மாறாதவர்களுக்கு பல இன்னல்களை கொடுத்தார். சிவன் கோயில்களுக்கும் திருப்பணி நடக்க விடாமல் தடுத்தார். இருந்தாலும் மூர்த்தி நாயனாரின் பணி தொடர்ந்தது. இதைக்கண்ட மன்னர் சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு செய்தார். மனம் நொந்தபடி கோயிலுக்கு சென்றார் மூர்த்தி நாயனார். சந்தனம் அரைக்கும் கல்லின் அருகே சென்றபோது, ‘சந்தனக்கட்டை இல்லை என்றால் என்ன? நம் கை இருக்கிறதே’ என்ற யோசனை தோன்றியது. உடனே ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி இரண்டு முழங்கைகளையும் அக்கல்லில் வைத்து தேய்க்கத் தொடங்கினார். ஒருகட்டத்தில் முழங் கைகளில் தோல் கிழிந்து, எலும்பு நொறுங்கி உள்ளிருக்கும் சதை வெளியே வந்தது. இதற்குமேல் பக்தனை சோதிக்க விரும்பவில்லை சொக்கநாதர். ‘மூர்த்தியாரே... இந்நாடு நாளை உம் வசப்படும். அதனை ஏற்று நல்லாட்சி செய்து இறுதியில் எமது திருவடி சேர்வாயாக’ என அசரீரி ஒலித்தது. பின் மூர்த்தி நாயனாரின் கைகள் முன்போல் மாறின. சந்தன மணம் கோயில் முழுவதும் கமழ்ந்தது. அன்று இரவே கன்னட மன்னர் திடீரென மரணம் அடைந்தார். அரச வாரிசு இல்லாமையால் யானையின் கையில் மாலை கொடுக்கப்பட்டு அந்த யானை யாருக்கு மாலை இடுகிறதோ அவரே அரசர் என்பது அக்கால நடை முறையாக இருந்தது. அதன்படி யானை மூர்த்தி நாயனாரின் கழுத்தில் மாலையிட்டது. இதனால் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் மக்களுக்கு நல்லாட்சியைக் கொடுத்தார். இறுதியில் ஒரு ஆடிக் கார்த்திகை நாளில் சிவனின் திருவடியை சேர்ந்தார் மூர்த்தி நாயனார்.