சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 44 · 87 / 159
சைவ சமயம் ஸ்தாபிதம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டுத் தலத்தில் ஆளுடையபிள்ளையாரும் (திருஞானசம்பந்தர்), ஆளுடைய அரசரும் (திருநாவுக்கரசர்) சந்தித்தனர். இருவரும் சிவபெருமானின் பெருமைகளை பேசி மகிழ்ந்தார்கள். அப்போது பாண்டிய நாடான மதுரையில் இருந்து அரசி மங்கையர்கரசியாரிடம் இருந்து ஓர் செய்தி வந்தது. பாண்டிய நாட்டில் சைவ சமயத்தை காக்க வாருங்கள் என திருஞானசம்பந்தருக்கு அழைப்பு விடுத்திருந்தார் அரசி. ஞானக்கன்றாகிய திருஞானசம்பந்த சுவாமிகளும் புறப்பட்டார். அப்போது தாங்கள் ‘அங்கு செல்வது பொருத்தமாக இருக்காது. சமணர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. மேலும் நாளும் கோளும் சரியான இடத்தில் இல்லை’ என தடுத்தார் திருநாவுக்கரசர். அதைக்கேட்ட திருஞானசம்பந்தர் ‘வேயுறு தோளி பங்கன்’ என்ற கோளறு பதிகம் பாடினார். அதில் தான் என்ன செய்யப்போகிறார் என்பதை பதிகத்தின் 10வது பாடலில் 3வது வரியில் சொல்லுகிறார். ‘புத்தரொடு அமனை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே’ என பாடி இருப்பார் திருஞான சம்பந்தர். அதன்படியே மதுரைக்கு வந்து திருநீற்றின் பெருமையை கூறி, கூன்பாண்டியனுக்கு உண்டான வெப்பு நோயை நீக்கி, அவனது கூனை நிமிர்த்தி சமணர்களை வாதில் வென்று, சைவ சமயத்தை மீண்டும் தழைக்கச் செய்தார் திருஞானசம்பந்தர். இதை நினைவூட்டும் வகையில் சிவன் கோயிலில் ஆறாம் திருநாளன்று சைவ சமய ஸ்தாபித்த லீலை நடக்கிறது.