மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 46 · 92 / 159

புதன் தலம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதன் தலம் என்பதற்கு ஆன்மிகம் மட்டுமின்றி, பாண்டியர்கள் வரலாறு, கடல்வழி வாணிபம், கலை, கலாசாரத்துடன் தொடர்புள்ள பல காரணங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மீனாட்சியின் திருமேனி கரும் பச்சை நிறம் கொண்டது. இது புதன் கிரகத்துடன் தொடர்புடையது. கலைகளைக் குறிக்கும் அடையாளம் கிளி. இது கலைகளில் சிறந்த கிளிமுக முனிவரான சுகபிரம்ம மகரிஷியைக் குறிக்கும். இவர் கலைகளில் சிறந்தவர். ஆதலால் கிளி கலைகளின் அம்சம். எல்லா கலைகளும் ஒருங்கே மீனாட்சி அம்மனின் கையில் அமர்ந்திருப்பதால் கலைகளின் அரசி. அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றவளாகவும், கலைகளின் அதிபதியாகவும் மீனாட்சி போற்றப்படுகிறாள். சந்திரன் கலைகளுடனும், புதன் கணக்கு, வணிகம் போன்றவற்றுடன் தொடர்புடையதாக ஜோதிடத்தில் மதுரை மீனாட்சி கோயிலை ‘புதன் க்ஷேத்திரம்’ எனப்படுவதற்கு இதுவே காரணம். மேலும், இதற்கு பின்னால் ஒரு பாண்டிய மன்னரின் வரலாற்றுத் தொடர்பும், அவரது மக்கள், நாட்டின் தனிச்சிறப்பும் காரணமாக இருக்கலாம் என்பதை வரலாற்று தகவல் மூலம் அறியலாம். சின்னமனூர் செப்பேடு கூறும் தகவல் சின்னமனூர் செப்பேட்டில் ‘வடிம்பலம்பாநின்ற பாண்டியன்’ பற்றிய தகவல் உள்ளது. ஒரு கல்பத்தின் முடிவில் கடலால் அழிவு ஏற்பட்ட பின்னரும், அடுத்த கல்பத்தில் பாண்டிய வம்சத்தின் ஆட்சி மீண்டும் தொடர்ந்ததாக அந்த வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. சந்திரனின் மகன் புதனே பாண்டியனாக பிறந்தார் என்றும், கடலையே நுழைவாயிலாகக் கொண்டு ஆட்சி புரிந்தார் என்கிறது. ராமனுக்கு எப்படி சூர்ய வம்சமோ அதைப் போல பாண்டியர்கள் சந்திர வம்சம். இங்கு சந்திரன் கடலையும் கலையையும், புதன் வாணிபத்தையும் குறிப்பதாக கொண்டால், கடல்வழி வாணிபத்தைச் சிறப்பாக மேற்கொண்ட பாண்டியர் வரலாற்றுடன் ‘புதன் தலம்’ என்பதை தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது. இதுவரை ‘புதன் க்ஷேத்திரம்’ என்பதற்கு எந்த புராணத்திலும் தெளிவான காரணம் இல்லை. ஆனால் மேற்கண்ட வரலாற்றின் அடிப்படையில் இந்தப் பெயரை இவ்வாறு விளக்கிப் புரிந்து கொள்ளும் போது, பொருள் கொண்ட வரலாறு சார்ந்த பதில் கிடைக்கிறது. பாண்டிய மன்னர்கள் கடல்வழிப் பயணம், கடல்வழி வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்கள் என்பதை பல்வேறு வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. கிரேக்கர், ரோமானியர், பாரசீகர், சீனர், அரேபியர் என பல நாட்டு மக்களுடன் வாணிபத் தொடர்பு, கலாசார தொடர்பு கொண்டிருந்தனர். கபாடபுரம் கடலோடு இணைந்த பாண்டிய வரலாறு இடைச் சங்க காலத்தில் கபாடபுரம் என்னும் கடற்கரையோரப் பகுதியில் இருந்த பாண்டிய நகரம் கடலால் அழிந்ததாக சிலப்பதிகாரம், கலித்தொகையில் செய்திகள் இடம் பெற்றுள்ளன. ராமாயணம், அர்த்த சாஸ்திரத்திலும் "பாண்டிய கவாடம்” என்ற பெயர் குறிப்பிடப்படுவது, பாண்டியர்களுக்கும் கடல் சார்ந்த பகுதிகளுக்கும் இருந்த தொடர்பை நினைவுபடுத்துகிறது. காலந்தோறும் ஏற்பட்ட மாற்றம் பாண்டியர் காலத்தில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளன. முதலாம் ஜடாவர்ம குலசேகரன் காலத்தில் அவரின் கீழ் பணியாற்றிய நரசிங்கன் என்ற அதிகாரி, 1190ல் திருப்பரங்குன்றத்தில் ஒரு மண்டபம் கட்டியதாகக் குறிப்பு உள்ளது. அதே போல், முதலாம் மாறவர்ம குலசேகரன் காலத்தில், 1309ல் ‘திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார்’ எனக் குறிப்பிடப்படும் மீனாட்சிக்கு கருவறை கட்டப்பட்டதாக திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள குறிப்பை செண்டப் பிள்ளை என்பவர் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மீனாட்சிக்கு சன்னதி இருந்திருக்கலாம் என்றும், பின்னாளில் படையெடுப்புகளாலும் அது அழிந்திருக்கலாம். மீனாட்சி அம்மன் கோயில் ஒரே காலகட்டத்தில் உருவான அமைப்பு அல்ல. பல்வேறு காலகட்டத்தில் கட்டடக்கலை, பிரகாரங்கள், கோபுரங்கள், கட்டுமானப் பணிகள், பூஜை முறைகள், அரசருக்குக் கட்டுப்பட்ட ஆலய நிர்வாகம், நிர்வாகிகள், திருவிழாக்கள் உள்ளிட்ட பல அம்சங்களில் மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இந்த மாற்றங்கள் முற்கால பாண்டியர்கள், களப்பிரர்கள், கர்நாடக அரசர்கள், முகமதிய படையெடுப்புகள், சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தான்கள், பிரிட்டிஷ் ஆட்சி, சுதந்திரத்திற்கு முன்பிருந்த ஆலயத் தனியார் நிர்வாகிகள், நிர்வாகக் குழுக்கள், சுதந்திர இந்தியாவின் பல்வேறு ஆட்சிகள் எனத் தொடர்ந்து, இன்று இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம் வரை வந்துள்ளன. எனவே புதன் தலம் என்ற பெயர் வெறும் ஆன்மிக அடையாளமா? அல்லது பாண்டியர்களின் கடல், வாணிபம், கலை, வரலாற்றுச் சிறப்புடன் இணைந்த பெயரா? என்ற கேள்விக்கு, கிடைக்கின்ற வரலாற்றுத் தகவல்களை இணைத்துப் பார்க்கும் போது, இந்தப் பெயருக்குப் பின்னால் சுவாரஸ்யமான வரலாற்று பின்னணி இருப்பதை உணர முடிகிறது. -–எஸ்.சங்கரன், வழக்கறிஞர், மதுரை.

விளம்பரம்
மேலே
விளம்பரம்