சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 46 · 96 / 159
முத்துமணி மாலை
17ம் நூற்றாண்டில் சிவபக்தியாகிய தமிழின் பெருமையை காசியில் நிலைநிறுத்தியவர் குமரகுருபரசுவாமிகள். இவர் சைவ சமயஞானக்குருநாதர்களில் முக்கியமானவராக போற்றப்படுகிறார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் வாழ்ந்த, சண்முக சிகாமணிக்கவிராயருக்கும் சிவகாமியம்மையாருக்கும் பிறந்தவர். ஆனால் பிறந்து ஐந்து ஆண்டுகளாகியும் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை என்ற கவலை பெற்றவர்களின் மனதை வாட்டியது. அவர்களது ஊருக்கு அருகே, இருக்கும் திருச்செந்தூரில் கோயில் கொண்டிருக்கும் முருகன் சன்னதிக்கு அன்னையும், தந்தையும் அழைத்துச் சென்றனர். பிள்ளைக்கு பேசும் திறன் அருளும்படி வேண்டினர். அன்று வரை பேசாதிருந்த அந்தப்பிள்ளை அப்போது, புலவர்களும் திணறும்படியான வெண்பா யாப்பில், ‘கந்தர் கலி வெண்பா’வைப் பாடியது. குமரனருளால் (முருகன்) தமிழ்க்கவி இயற்றும் அருள் பெற்றதால், அன்றிலிருந்து அவர் குமரகுருபரர் ஆனார். அப்போது மதுரையை ஆட்சி செய்தவர் திருமலைநாயக்கர். ‘மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்’ நூலை அரங்கேற்றம் செய்ய மதுரைக்கு வந்தார். திருமலை நாயக்கர் முன்னிலையில் மீனாட்சி அம்மன் கோயில் சன்னதியில், அந்த நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அப்போது பிள்ளைத் தமிழின் ஒவ்வொரு செய்யுளாக குமரகுருபரர் பாடிக்கொண்டிருந்த வேளையில், மீனாட்சி அம்மன் சிறுமி வடிவில் வந்தாள். திருமலை நாயக்கரின் மடியில் அமர்ந்து கொண்டு, அந்த அரங்கேற்றம் முழுவதையும் கண்டு களித்தாள். அரங்கேற்றம் முடிந்ததும், அரசரின் கழுத்திலிருந்த முத்து மணிமாலையைக் கழற்றினார் மீனாட்சி. அதை குமர குருபரரின் கழுத்தில் அணிவித்தாள். இப்படி மீனாட்சியின் ஆசி பெற்றவர்தான் குமரகுருபரர். இதன்பின் குமரகுருபரரின் புகழ் நாளுக்கு நாள் அதிகரிக்கத்தொடங்கியது. திருவாரூர், சிதம்பரம் சென்று தனது ஈடு இணையற்ற தமிழ்ப்புலமையால் அங்கும் பாடல்களை பாடினார். பிறகு காசிக்கு யாத்திரையாக சென்றவர், அங்கு சைவ மடம் அமைக்க நினைத்தார். ஆனால் காசியானது முகலாய மன்னர்களுடைய வசத்தில் இருந்தது. அவர்கள் பேசுவதோ வேறு மொழி. அவர்களை சந்தித்து பேச இந்துஸ்தானி மொழி வல்லமையை தந்தருள வேண்டுமென, சரஸ்வதியை வேண்டினார். அப்படி அவர் வேண்டி பாடியதே ‘சகலகலா வல்லி மாலை’ ஸ்தோத்திரம். சரஸ்வதியும் அருள்புரியவே எல்லோரும் வியக்கும்படி பேசி காசியில் சைவமடம் அமைத்தார். இதுமட்டுமல்ல. பல நூல்களை இயற்றியுள்ளார். இதோ அவை, கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம், மதுரை மீனாட்சி அம்மை குறம், மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச்செய்யுள் கோவை, பண்டார மும்மணிக்கோவை, காசிக்கலம்பகம், சகலகலா வல்லி மாலை, காசித் துண்டி விநாயகர் பதிகம், கயிலைக்கலம்பகம், தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை ஆகிய நூல்களை இயற்றி சைவசமயத்திற்கு பெருமை சேர்த்தார். துரதிர்ஷ்டவசமாக, கயிலைக் கலம்பகம், காசித் துண்டி விநாயகர் பதிகம் ஆகியன நமக்கு கிடைக்கவில்லை. குமரகுருபர ரால் அமைக்கப்பட்ட மடம் தமிழகத்தில் இன்றும் திருப்பனந்தாளில் வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தொடுக்கும் கடவுள் பழம்பாடல்
தொடையின் பயனே நறைபழுத்த
துறைத்தீம் தமிழின் ஒழுகுநறும்
சுவையே அகந்தைக் கிழங்கைஅகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
ஏற்றும் விளக்கே வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்துநின்ற
ஒருவன் திருஉள் ளத்தில்அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிர்ஓ வியமே மதுகரம்வாய்
மடுக்கும் குழல்காடு ஏந்தும்இள
வஞ்சிக் கொடியே வருகவே
மலயத்துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே
— மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ்