மே மாதத்தில் வரும் ஹஸ்த நட்சத்திரதன்று நடைபெறும் பிரதிஷ்டா தின சிறப்பு பூஜை வருட முக்கிய பூஜைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆங்கில புத்தாண்டு, தமிழ்புத்தாண்டு, விஷூ, ஆடிமாத கடைசி வெள்ளியன்று அஷ்டத்ரவ்ய மஹா கணபதி ஹோமம், ஓணம், விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, வித்யாரம்பம், தீபாவளி ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
மேலும் கார்த்திகை முதல் மார்கழிமுடிய தினமும் ஆராதனைகள் உண்டு. இவையல்லாமல் வியாழன்று சந்தான கோபால பூஜை, வெள்ளியன்று மாங்கல்ய புஷ்பாஞ்சலி, முதல் தமிழ்மாத சனிதோறும் புஷ்பாஞ்சலி அமாவாசையன்று காரிய சித்தி ஸ்ரீபகவதி சேவை பூஜை என எண்ணற்ற பூஜைகள் நடைபெறுகின்றன. மண்டல காலத்தில் தினமும் கணபதி ஹோமத்துடன் தொடங்கும் பூஜைகள், பிற ஆராதனைகள், ஐயப்பமார்களின் சரண கோஷங்கள் கருவறையைச் சுற்றிலும் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகள், வேத கோஷங்கள் என நம்மை இறையருளில் மெய்மறக்க செய்கின்றன.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
கோயில் பணிகள் நிறைவுற்ற நிலையில், தலைவர் பொறுப்பில் இருந்தவரின் காலில் இருந்த ஆறாத புண்ணும் பூர்ணமாக ஆறி, நல்ல நலத்துடன் காணப்படுகின்றார். நடப்பதற்கு எந்த விதமான அவஸ்த்தையும் இல்லை. இது ஐயப்பன் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையும் அவன் கருணையுமின்றி வேறு என்னவாக இருக்க முடியும் என நினைவு கூறுகின்றார். 25 ஆண்டுகளாக காலில் ஏற்பட்ட புண்ணால் பட்ட துன்பங்களும் சிரமங்களும் வார்த்தைகளால் சொல்லி மாளாது. இத்துடன் சபரிமலைக்கு சென்றதோடு ஐயப்பனுக்கும் தளராமல் சேவை செய்தேன். மருத்துவர்களே ஆச்சரியப்படும் வகையில் பூர்ண நலம் பெற்றேன் என்றார். கோயில் கேரள சிற்ப சாஸ்திர முறைப்படி கட்டப்பெற்றுள்ளது. மூன்று கலசங்களையுடைய ஒரு நிலை ராஜ கோபுரமும் பெரிய நுழைவு வாயிலையும் கொண்டுள்ளது. கருவறையைச் சுற்றி கணபதி, முருகன், பகவதி மகாவிஷ்ணு மற்றும் நவகிரஹ சன்னதிகள் அமைந்துள்ளன. உட்பிரகார சுவற்றில் ஐயப்பனின் வரலாற்றைக் குறிக்கும் படங்களையும் அதன் விளக்கங்களையும் அழகுடன் புகைப்படங்களாக காட்சிப்படுத்தி உள்ளனர். சிறிய கோயிலாக இருந்தாலும் மிகவும் நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் அமைத்திருப்பது சிறப்பு.
தலபெருமை:
10 தூண்களைக் கொண்ட முன் மண்டபத்தில் பலிபீடமும், செப்புத் தகடுகள் வேய்ந்த நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய நெடிதுயர்ந்த கொடிக்கம்பம் நம்மை வரவேற்பதைப் போல் உள்ளது. மண்டபத்தூண்களில் தசாவதார சுதைச் சிற்பங்களை நேர்த்தியாக அமைத்துள்ளனர். கருவறையில் சாந்தமே உருவான புன்னகை தழும்பும் முகத்துடன், எண்ணற்ற நெய் தீபங்களின் ஒலி வெள்ளத்தில் கருணையோடு அருள்பாலிக்கின்றார். கோயில் முழுவதும் தீபம் எரியும் நெய்யின் நறுமணம் வியாபித்துள்ளதை உணரமுடிகிறது.
தல வரலாறு:
மலைகளின் ராணியாக வீற்றிருந்து கொள்ளை கொள்ளும் அழகு கொண்டது நீலகிரிமலை. இம்மலையின் அடிவாரத்தில் பசுமையான தென்னை, பாக்குத்தோப்புகள் அடர்ந்த பகுதியில், மேட்டுப்பாளையம் சிவன் புரத்தில் அமைந்த எழில்மிகு திவ்ய க்ஷேத்திரம் தான் ஐயப்பன் திருக்கோயில். காரமடை சாலையில் மேற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. ஐயப்பன் கோயில் என்றாலே ஓர் அர்ப்பணிப்பு உணர்வுடன் விளங்குவதைக் காணமுடியும். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் இந்நகரில் ஐயப்பனுக்கென தனிக் கோயில் ஏதும் இல்லை. சபரிமலைக்குச் செல்ல மாலை போடுவதற்கும் கட்டுநிறை செய்வதற்கும் 45 கி.மீ. தொலைவில் உள்ள கோவைக்குச் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது. சபரிமலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையும் வருடா வருடம் கூடிக்கொண்டே வந்தது. ஒத்த குணங்களையுடைய பக்தர்கள் சேர்ந்து ஐயப்ப சேவா சமிதி என்ற அமைப்பினை ஏற்படுத்தினர் பின் ஐயப்ப விளக்கு பூஜை நடைபெற்றது.
இப்பூஜை, ஐயப்பனுக்கு கோயில் அமைப்பதற்கென, ஆண்டவனிடம் விண்ணப்பம் செய்வதற்காக நடத்தப்படும் பூஜை ஆகும். இவ்வாறு நடத்தப்பெற்ற பல்வேறு பூஜைகளுக்குப் பிறகு சுவாமி ஐயப்பன் கோயில் கட்ட அனுமதி வழங்கினார். அதுவரை பிற கோயில்களில் ஐயப்பன் படத்தை வைத்து பூஜைகள், பஜனை, மாலை போடுதல் போன்றவற்றை மேற்கொண்டனர். சமிதி குழுவினர் இடம் வாங்கவும், கோயில் கட்டவும் முடிவு செய்து அதற்கான முதற்கட்ட பணிகளைத் துவங்கினர். இப்பணியில் முன்னின்று, தலைமைப் பொறுப்பை ஏற்று நிர்வகித்து வந்த ஒரு பக்தர் ஐயப்பன் மீது அளவற்ற பக்தியும் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டவர். அவருக்கு இரு கால்களிலும் ஆறாத புண் தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ஆங்கில மருத்துவம் ஆயுர்வேத சிகிச்சைகள் போதிய பலன் அளிக்கவில்லை. நடப்பதற்கே மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். அந்த நிலையிலும் காலில் துணியைச் சுற்றி கட்டிக் கொண்டு அலுவல்களைக் கவனித்து வந்தார்.
இந்நிலையில் பொதுமக்கள், ஐயப்ப பக்தர்கள் ஆகியோரது பங்களிப்புடன் தற்போது கோயில் உள்ள இடத்தை வாங்கினர். ஒரு நல்ல நாளில் பூமி பூஜை போடப்பட்டு கோயில் கட்டுமானப் பணியைத் துவக்கினர். செங்கல் தயாரிப்பாளர்கள், மணல் விநியோகஸ்தர்கள், சிமெண்ட் விற்பனையாளர் என தங்கள் பங்களிப்பாக பொருட்களை அதிக அளவில் வழங்கினர். தனக்கிருக்கும் கால் வலியைப் பொருட்படுத்தாது அருகில் இருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்த அதே சமயம், ஐயப்பனிடம் நலம் பெற தொடர்ந்து வேண்டிக் கொண்டே இருந்தார். ஐயப்பன் திருவருள் துணையால் கோயில் கட்டுமான பணிகள் நிறைவுற்று 19.5.91 அன்று ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் பங்கு பெற்ற கும்பாபிஷேக விழா சீரோடும் வெகுசிறப்போடும் நடந்தேறியது. கோயில் கட்டுமானப் பணியில் சுணக்கம் ஏற்பட்ட நேரத்தில் வசதி இருந்தும் ஒட்டுமொத்தமாக உதவ முடியாத நிலையில் இருந்த ஐயப்ப பக்தர் ஒருவர் வாரம் ரூ. 1000/ வீதம் 65 வாரங்களில் ரூ. 65,000 கொடுத்து உதவியது பேருதவியாக இருந்ததாம். படிப்படியாக பகவதி, மகா விஷ்ணு, நவகிரஹங்கள், கொடிமரம் பலிக்கல் ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2005 பந்தளமகா ராஜா இத்தலத்திற்கு வருகை தந்து சிறப்பித்ததோடு அல்லாமல் சுற்றம்பலம் கட்டுவதற்காக அடிக்கல்லும் நாட்டினார். இவ்வாறாக ஒவ்வொரு பணியும் முடித்து, இக்கோயிலிற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் ஒருங்கே அமையப்பெற்று, முழுமைபெற்ற ஓர் கோயிலுமாகத் திகழ்கின்றது.